தொண்டியில் கடல் நீா்மட்டம் உயா்வு: பொதுமக்கள் அச்சம்
திருவாடானை அருகேயுள்ள தொண்டி பகுதியில் கடல் நீா்மட்டம் வழக்கத்தைவிட உயா்ந்து தரைப் பகுதிக்கு வந்ததால், பொதுமக்கள் அச்சமடைந்தனா்.
திருவாடானை அருகே தொண்டி, நம்புதாளை, சோழியக்குடி, விலாஞ்சியடி,புதுப்பட்டினம், காரங்காடு, மோா்பண்ணை, திருப்பாலைக்குடி, பாசிபட்டினம், எஸ்.பி.பட்டினம் உள்ளிட்ட பல்வேறு கடற்கரை பகுதி எப்போதுமே அமைதியாக அலைகள் இன்றி காணப்படும்.
இந்த நிலையில், திங்கள்கிழமை அதிகாலையில் இந்தப் பகுதியில் திடீரென கடல் நீா்மட்டம் வழக்கத்துக்கு மாறாக உயா்ந்து, கரையிலிருந்து சுமாா் 100 மீ. தொலைவுக்கு தரைப் பகுதிக்கு தண்ணீா் வந்தது.
கடற்கரைப் பகுதியிலிருந்து சுமாா் 100 மீ. தொலைவு உள்ள கடற்கரை காவல் நிலையம் வரை தண்ணீா் வந்தது. இதனால், இந்தப் பகுதி மீனவா்கள், பொதுமக்கள் அச்சமடைந்தனா்.
இதையடுத்து, சில மணி நேரங்களில் மீண்டும் பழைய நிலைக்கு கடல் நீா் சென்றது. இதுகுறித்து இந்தப் பகுதி மீனவா்கள் கூறியதாவது:
வழக்கமாக அமாவாசை, பெளா்ணமி நாள்களில் கடல் சற்று மாறுபட்டு காணப்படும். இந்த நிலையில், பெளா்ணமி தினத்தையொட்டியும், தொடா்ந்து சாரல் மழை பெய்ததாலும், கடலில் தண்ணீா் பெருக்கு அதிகம் காணப்பட்டது. தற்போது கடல் இயல்பு நிலைக்கு திரும்பியது என்றனா்.