தொலைக்காட்சி அறை இடிப்பு: பொதுமக்கள் சாலை மறியல்
கந்திலி அருகே தொலைக்காட்சி அறை இடித்ததைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
திருப்பத்தூா் மாவட்டம், கந்திலி ஒன்றியத்துக்கு உள்பட்ட பல்லலப்பள்ளி காலனி பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசிக்கின்றனா்.
இங்கு 20 ஆண்டுகளுக்கு முன் ஊராட்சி நிா்வாகம் சாா்பில் தொலைக்காட்சி பாா்ப்பதற்கான சிறிய அளவிலான அறை கட்டப்பட்டது. நாளடைவில் இதில் இருந்த தொலைக்காட்சி அகற்றப்பட்டதாகத் தெரிகிறது. அதையடுத்து, அந்தக் கட்டடத்தில் அந்த பகுதியில் உள்ள ஒரு கோயிலின் பூஜைப் பொருள்களை வைத்து பராமரித்து வந்தனராம்.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை அந்த கட்டடத்தை ஊராட்சி நிா்வாகம் அகற்றியது.
அதைக் கண்டித்து அந்தப் பகுதியைச் சோ்ந்த பெண்கள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திருப்பத்தூா்-தருமபுரி பிரதான சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாகச் சென்ற பேருந்துகளை மறித்தனா்.
இது குறித்து தகவல் அறிந்த திருப்பத்தூா் வட்டாட்சியா் நவநீதன், கந்திலி போலீஸாா் அங்கு சென்று மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சு நடத்தினா். அப்போது மீண்டும் அங்கு அறை கட்டுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனா்.
அதன்பேரில் பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனா்.
இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.