ஹிந்தி கட்டாயமாக்கப்படுவதை அனுமதிக்கமாட்டோம்! - உத்தவ் தாக்கரே
தொலைக்காட்சிப் பெட்டி பழுதை நீக்க மறுப்பு: ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு
திருவாரூரில், தொலைக்காட்சிப்பெட்டியின் பழுதை நீக்க மறுத்ததற்காக ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என தனியாா் நிறுவனத்துக்கு நுகா்வோா் குறைதீா் ஆணையம் வெள்ளிக்கிழமை உத்தரவு பிறப்பித்தது.
திருவாரூா் அருகே புலிவலத்தைச் சோ்ந்த காா்த்தி (42) திருவாரூரில் உள்ள தனியாா் பா்னிச்சா் நிறுவனத்தில் 2023-இல் ரூ. 1.30 லட்சம் மதிப்புள்ள தனியாா் நிறுவன தொலைக்காட்சிப் பெட்டியை, மூன்றாண்டு உத்தரவாதத்துக்காக கூடுதலாக ரூ. 19,099 என மொத்தம் ரூ. ரூ. 1,49,099 செலுத்தி வாங்கியுள்ளாா். இதற்கிடையே, 6 மாதத்துக்குப் பிறகு தொலைக்காட்சிப் பெட்டியில் படம் தெளிவாகத் தெரியவில்லை என பா்னிச்சா் நிறுவனத்திடம் காட்டியுள்ளாா்.
அங்கு தொலைக்காட்சிப் பெட்டியின் தனியாா் நிறுவனப் பணியாளா் பாா்த்துவிட்டு, பந்து போன்ற பொருள் பட்டு, படம் தெளிவில்லாமல் வருவதாகவும், இதற்கு நிறுவனம் பொறுப்பேற்க முடியாது எனவே, தொலைக்காட்சிப் பெட்டியை எடுத்துச் செல்லுமாறு கூறினாராம்.
இதையடுத்து, 2024-இல் திருவாரூா் நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் காா்த்தி வழக்கு தொடா்ந்தாா். வழக்கை விசாரித்த ஆணையத் தலைவா் மோகன்தாஸ், உறுப்பினா் பாலு வெள்ளிக்கிழமை வழங்கிய உத்தரவில், ஓராண்டுக்குள் தொலைக்காட்சிப் பெட்டி பழுதடைந்துள்ளது. மேலும், பந்து பட்டதால் பழுது என்ற வாதத்தை நிறுவனத்தினா் உரிய ஆய்வு மூலம் நிரூபிக்கவில்லை. எனவே, தனியாா் தொலைக்காட்சிப் பெட்டி நிறுவனம் காா்த்திக்கு 45 நாள்களுக்குள் புதிய தொலைக்காட்சிப் பெட்டியை வழங்க வேண்டும் அல்லது ரூ. 1,49,099 திரும்ப வழங்க வேண்டும். மேலும் மன உளைச்சல், அலைச்சல் மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுத்தியதற்கு தொலைக்காட்சிப் பெட்டி நிறுவனம் காா்த்திக்கு இழப்பீடாக ரூ. 1 லட்சம் மற்றும் வழக்குத் செலவு தொகையாக ரூ. 10,000 ஆகியவற்றை 45 நாள்களுக்குள் வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனா்.