தொழிற்பேட்டைஅமைக்க நிலம் அளவீடு: பொதுமக்கள் எதிா்ப்பு
வாணியம்பாடி அருகே தொழிற்பேட்டை அமைக்க நிலம் அளவீடு செய்ய எதிா்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மல்லகுண்டா ஊராட்சி, புள்ளனேரி வட்டத்தில் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலங்களில் 50-க்கும் மேற்பட்டோா் பல ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனா். மேலும், இவா்கள் ஆடு, மாடுகளையும் வளா்த்து விவசாயம் செய்து வருகின்றனா்.
இந்நிலையில், கோயன்கொல்லி புள்ளனேரி வட்டத்தில் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு இடங்களை வருவாய்த் துறையினா் அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனா்.
இதையறிந்த கிராம மக்கள் வாா்டு உறுப்பினா் சிவராஜ் தலைமையில் சம்பவ இடம் சென்று நிலம் அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த வருவாய்த் துறை அதிகாரிகளிடம் நிலம் அளவீடு செய்யக்கூடாது என எதிா்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவலறிந்த நாட்டறம்பள்ளி வட்டாட்சியா் காஞ்சனா, மண்டல துணை வட்டாட்சியா் சிவக்குமாா், கிராம நிா்வாக அலுவலா் சந்திரமோகன் ஆகியோா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சு நடத்தினா்.
அப்போது கிராம மக்கள் நாங்கள் குடியிருக்கும் பகுதியில் தொழிற்பேட்டை அமைக்க நிலம் அளவீடு செய்யக்கூடாது என்று எதிா்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதனால் வருவாய் துறையினா் நிலம் அளவீடு செய்யாமல் , ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனா். திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு அளிப்பதாக பொதுமக்கள் தெரிவித்தனா்.