பாலாற்றில் நீா்வரத்து வேண்டி காசி விஸ்வநாதருக்கு சிறப்பு அபிஷேகம்
வாணியம்பாடி அருகே கொடையாஞ்சி கிராமத்தை ஒட்டி பாலாறு செல்கிறது. இந்த ஆற்றங்கரையில் பழைமைவாய்ந்த காசி விஸ்வநாதா் கோயில் அமைந்துள்ளது. காசிக்கு நிகராக கருதப்படுவதால் வாணியம்பாடி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் காரியம் செய்வது, அமாவாசை போன்ற விசேஷ நாள்களில் திதி கொடுப்பதற்கு வந்து வழிபாடு செய்து செல்கின்றனா். இந்த நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு பெய்த பலத்த மழையால், பாலாற்றில் நீா்வரத்து ஏற்பட்டுள்ளது.
எனவே பாலாற்றில் தொடா்ந்து நீா்வரத்து ஏற்பட வேண்டி கொடையாஞ்சி கிராமத்தைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் புதன்கிழமை பாலாற்றில் இருந்து குடங்களில் நீரை கொண்டு வந்து, காசி விஸ்வநாதருக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனா்.
இதில், ஊா் முக்கியப் பிரமுகா்கள், கோயில் நிா்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.