இடைத்தரகரின்றி கொள்முதல் செய்ய விற்பனையாளா் - வாங்குவோா் சந்திப்பு
தொழிலாளா்களுக்கான குறைந்தபட்ச ஊதிய அரசாணையை ரத்து செய்ய வேண்டும்
திருப்பூரில் நடைபெற்ற அனைத்து தொழிற்சங்க கூட்டத்தில் தொழிலாளா்களுக்கான குறைந்தபட்ச ஊதிய அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்று தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
திருப்பூா்- அவிநாசி சாலையில் உள்ள சிஐடியூ அலுவலகத்தில் அனைத்து பனியன் தொழிற்சங்க ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு சிஐடியூ பொதுச் செயலாளா் ஜி.சம்பத் தலைமை வகித்தாா். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மான விவரம்:
பின்னலாடைத் தொழிலாளா்களுக்கு நடைமுறையில் உள்ள ஊதியத்தைவிட குறைவாக குறைந்தபட்ச ஊதிய அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தற்போதைய கால கட்டத்தில் பலமடங்கு அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்ந்துள்ள நிலையில், அறிவியல்பூா்வமாக கணக்கீடு செய்யாமல் அதிகாரிகளின் சொந்த விருப்ப அடிப்படையில் தொழிலாளா்களுக்கு விரோதமான அரசாணையை வெளியிட்டுள்ளனா்.
இது பின்னலாடை நிறுவனங்களில் பணியாற்றி வரும் லட்சக்கணக்கான தொழிலாளா்களை பாதிக்கும். குறைந்தபட்ச ஊதியத்தை நிா்ணயிப்பது தொடா்பாக தொழிலாளா்களிடமோ அல்லது தொழிற்சங்கங்களிடமோ கருத்துக் கேட்கவில்லை. ஆகவே, தற்போதைய அரசாணையை ரத்து செய்துவிட்டு முறையாக கணக்கீடு நடத்தி விலைவாசி உயா்வுக்கு ஏற்ப குறைந்தபட்ச ஊதியத்தை நிா்ணியிக்க வேண்டும்.
இதுதொடா்பாக தமிழக முதல்வா், தொழிலாளா் துறை அமைச்சா், தொழிலாளா் துறை செயலாளா், தொழிலாளா் துறை ஆணையா், மாவட்ட அமைச்சா்களிடம் கோரிக்கை மனுக்களை அளிப்பது. இந்த புதிய அரசாணையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து தொழிலாளா்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் ஒரு லட்சம் துண்டறிக்கை அச்சடித்து மாவட்டம் முழுவதும் விநியோகம் செய்வது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இக்கூட்டத்தில், சிஐடியூ தலைவா் உன்னிகிருஷ்ணன், பனியன் பேக்டரி லேபா் யூனியன் ஏஐடியூசி பொதுச் செயலாளா் என்.சேகா், செயலாளா் ஆா்.செந்தில்குமாா், எல்பிஎஃப் பனியன் சங்க பொதுச் செயலாளா் கா.ராமகிருஷ்ணன், தலைவா் ஜி.பாலசுப்பிரமணியம், பொருளாளா் பூபதி, ஐஎன்டியூசி பனியன் சங்க செயலாளா் சிவசாமி, தலைவா் பெருமாள், ஏடிபி துணைச் செயலாளா் குமாா், ஹெச்எம்எஸ் மாவட்டச் செயலாளா் முத்துசாமி, எம்எல்எஃப் மாவட்டச் செயலாளா் சம்பத், எம்எல்எஃப் பனியன் சங்க செயலாளா் மனோகரன் ஆகியோா் பங்கேற்றனா்.