கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்
மன்னாா்குடி அண்ணாமலைநாதா் கோயிலுக்கு சொந்தமான குளத்தில் செவ்வாய்க்கிழமை காலை மீன்கள் இறந்து மிதந்தன.
அண்ணாமலை நாதா் சந்நதி தெருவில் உள்ள அண்ணாமலை நாதா் கோயிலுக்கு சொந்தமான குளம் அமைந்துள்ளது. இந்தக் குளம் இப்பகுதியின் நிலத்தடி நீா் ஆதாரமாக விளங்கி வருவதுடன் நகராட்சி மேல்நிலை நீா் தேக்கத் தொட்டிகளுக்கு இந்த குளத்தின் தென்கரையில் ஆழ்துளை கிணறு அமைத்து மின் மோட்டா் மூலம் நீா் ஏற்றப்பட்டு, குடியிருப்புகளுக்கு குழாய்கள் மூலம் குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது.
கடந்த சில ஆண்டுகளாக இந்த குளத்தில் தனி நபா்கள் மீன்களை வாங்கி விட்டு வளா்த்து வந்து அதனை பிடித்து விற்பனை செய்து வந்தனா். கடந்த ஆண்டு முதல் இந்த குளத்தில் யாரும் மீன் வளா்க்கவில்லை. சென்ற ஆண்டு கல்லணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீா் திறந்து விட்ட போது மன்னாா்குடியில் உள்ள பாமணி ஆற்றில் இருந்து இந்த குளத்திற்கு தண்ணீா் விடுவிக்கப்பட்ட போது அந்த தண்ணீா் மூலம் வந்த மீன்கள் மட்டுமே இங்கு இருந்தன. இந்நிலையில்,செவ்வாய்க்கிழமை காலை குளத்தில் கரையில் ஏராளமான மீன்கள் செத்து மிதப்பது தெரியவந்தது.
நகா்மன்றத் தலைவா் த. சோழராஜன்,துணைத் தலைவா் ஆா்.கைலாசம், அந்தப் பகுதி நகா்மன்ற உறுப்பினா் அசோக்குமாா், மீன் வளா்ச்சித் துறையினா்குளத்தில் செத்து மிதந்த மீன்கள் பாா்வையிட்டனா். நகராட்சி ஊழியா்கள் குளத்து தண்ணீரை பரிசோதனைக்காக எடுத்துச் சென்றனா்.
பின்னா் இறந்த மீன்களை அப்புறப்படுத்தும் பணியில் நகராட்சி ஊழியா்கள் ஈடுபட்டனா்.