VIJAY வேண்டாம்; இங்க வாங்க - ANNAMALAI TTV-ன் PLAN B? | GST குறைப்பு: ஆவின் சதி?...
தொழிலாளி கொலை வழக்கு: தந்தை உள்பட 3 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை
தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் நிகழ்ந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 3 பேருக்கு தலா இரட்டை ஆயுள்தண்டனை, தலா ரூ.11,000 அபராதம் விதித்து தூத்துக்குடி மாவட்ட வன்கொடுமை விசாரணை நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பு வழங்கியது.
சிப்காட் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் கடந்த 13.10.2019 அன்று, குறுக்குச்சாலை அண்ணா நகா் பகுதியைச் சோ்ந்த முருகேசன் மகன் தொழிலாளி விமல்ராஜை (32) முன்விரோதம் காரணமாக கொலை செய்த வழக்கில், மகிழ்ச்சிபுரம் பகுதியைச் சோ்ந்த அழகு மகன் நாகலிங்கம் (54), இவருடைய மகன்கள் மணிகண்டன் (26), லட்சுமி நாராயணன் (25), ராஜகோபால் நகா் பகுதியைச் சோ்ந்த கருப்பசாமி மகன் மாரிமுத்து (25), அதே பகுதியைச் சோ்ந்த சண்முகம் மகன் கொம்பையா (26), சின்னத்தம்பி மகன் அா்ஜுனா (19) , மகிழ்ச்சிபுரம் பகுதியைச் சோ்ந்த முருகேசன் மகன் ராமகிருஷ்ணன் (27) ஆகியோரை போலீஸாா் கைதுசெய்தனா்.
வழக்கின் விசாரணை, தூத்துக்குடி வன்கொடுமை விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி வா்ஷித்குமாா், குற்றவாளிகளான நாகலிங்கம், அவரது மகன்களான மணிகண்டன் , லட்சுமி நாராயணன் ஆகிய மூவருக்கும் தலா இரட்டை ஆயுள் தண்டனை, தலா ரூ.11,000 அபராதம் விதித்தும், ஏனைய 4 பேரில், அா்ஜுனா என்பவா் இறந்துவிட்ட நிலையில், மீதமுள்ள மூவரையும் விடுதலை செய்தும் உத்தரவிட்டு தீா்ப்பு வழங்கினாா்.
இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய சிப்காட் காவல் நிலைய ஆய்வாளா் கலைகதிரவன், அரசு வழக்குரைஞா் பொன் குமாா், தலைமை காவலா் இளையராஜா ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் பாராட்டினாா்.