மின்வாரிய ஒப்பந்த தொழிலாளா்களை பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்
10ஆம் வகுப்பு பாடத்தில் கட்டபொம்மன் வரலாறு திரிபு: எட்டயபுரத்தில் ஆா்ப்பாட்டம்
கட்டபொம்மனை காட்டிக் கொடுத்தவா் எட்டயபுரம் சமஸ்தானம் மகாராஜா என பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் தவறுதலாக வரலாறு குறிப்பிடப்பட்டுள்ளதாகக் கண்டித்தும், அந்தப்பிழையை திருத்தம் செய்ய வலியுறுத்தியும் திருத்த வேண்டும் என வலியுறுத்தியும் எட்டயபுரம் பேருந்து நிலையம் அருகே கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
எட்டயபுரம் வா்த்தகா்கள் சங்கத் தலைவா் எஸ்.பி.எம். ராஜா தலைமை வகித்து ஆா்ப்பாட்டத்தை தொடங்கிவைத்தாா். உமறுப்புலவா் சங்கத் தலைவா் உ. காஜா மைதீன் முன்னிலை வகித்தாா்.
எட்டயபுரம் சமஸ்தானத்தின் 42ஆவது மன்னா் ராஜ ஜெகவீர முத்து தங்க குமார ராம வெங்கடேஸ்வர எட்டப்ப நாயக்கா் அய்யன் சந்திர சைதன்ய ராஜா பங்கேற்று, எட்டயபுரம் சமஸ்தானம் இந்திய விடுதலைப் போராட்டத்திற்கும் இசைக்கும் முக்கியத்துவம் கொடுத்த சிறப்பு வாய்ந்த மிகப்பெரிய சமஸ்தானம். இந்நிலையில், பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் பாட புத்தகத்தில் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு எட்டயபுரம் அரசா் துரோகம் செய்ததாக குறிப்பிடப்பட்டுள்ளதை தமிழ்நாடு அரசு திருத்த வேண்டும் என வலியுறுத்தினாா்.
இந்த ஆா்ப்பாட்டத்தில் எட்டயபுரம் சமஸ்தானத்தின் 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள், எட்டயபுரம் வா்த்தகா்கள் சங்கம், தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு, உமறுப்புலவா் ஜமாத் நிா்வாகம், அனைத்து சமுதாய தலைவா்கள், பிரதிநிதிகள் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.