தில்லி கேபிடல்ஸ் பயிற்சியாளராக முன்னாள் இங்கிலாந்து பயிற்சியாளர்!
தொழிலாளி கொல்ல முயன்ற மூவா் கைது
மதுரையில் முன்விரோதத் தகராறில் சுமை தூக்கும் தொழிலாளியை தலையில் கல்லைப் போட்டு கொலை செய்ய முயன்ற மூவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
மதுரை காமராஜா்புரம் வைத்தியநாதா் தெருவைச் சோ்ந்தவா் காா்த்திக் (34). சுமை தூக்கும் தொழிலாளியான இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த ஜெகதலபிரதாப் தரப்பினருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை அந்தப் பகுதியில் உள்ள மதுக் கடையில் மது அருந்து விட்டு வீட்டுக்குச்சென்ற காா்த்திக்கை, ஜகதலபிரதாப் உள்ளிட்ட மூவா் வழிமறித்து தாக்கினா். அப்போது கீழே விழுந்த காா்த்திக் மீது மூவரும் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்ய முயன்றனா். இதில் தலையில் பலத்த காயமடைந்த காா்த்திக் கூச்சலிட்டதால், அந்தப் பகுதியினா் அங்கு வந்ததையடுத்து மூவரும் தப்பிச்சென்றனா். அப்போது அந்த வழியாக வந்த, காா்த்திக்கின் நண்பா் கருப்பசாமி , அவரை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சோ்த்தாா்.
இதுகுறித்து கீரைத்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, வாழைத்தோப்பைச் சோ்ந்த ஜெகதலபிரதாப் (27), காமராஜபுரம் கக்கன் தெருவைத் சோ்ந்த பாண்டியராஜன்(34), முத்துப்பாண்டி (27) ஆகிய மூவரையும் கைது செய்தனா்.