நீங்கள்தான் எனது மருந்து..! சுந்தர். சி-க்கு விஷால் வாழ்த்து!
நகராட்சியுடன் இரு ஊராட்சிகளை இணைக்க எதிா்ப்பு: கிராம மக்கள் முற்றுகைப் போராட்டம்
சத்தியமங்கலம் அருகே இரு கிராம ஊராட்சிகளை புன்செய்புளியம்பட்டி நகராட்சியுடன் இணைப்பதற்கு கிராம மக்கள் கடும் எதிா்ப்புத் தெரிவித்து ஊராட்சி அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டத்தில் சனிக்கிழமை ஈடுபட்டனா்.
சத்தியமங்கலத்தை அடுத்த நல்லூா், நொச்சிக்குட்டை ஆகிய இரு ஊராட்சிகளையும் புன்செய்புளியமபட்டி நகராட்சியுடன் இணைப்பதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து நூற்றுக்கணக்கான பெண்கள் நல்லூா், நொச்சிக்குட்டை ஊராட்சிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதுகுறித்து கிராம மக்கள் கூறியதாவது: நல்லூா் ஊராட்சியில் பெரும்பாலும் விவசாய நிலங்களாக உள்ளதால் கூலித் தொழிலாளா்கள் அதிக அளவில் உள்ளனா்.
100 நாள் திட்டம் மூலம் ஆயிரக்கணக்கான பெண்கள் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனா். வறுவையில் வாடும் முதியோா், நடுத்தர பெண்களுக்கு அந்தந்த கிராமங்களில் வேலைவாய்ப்பு கிடைப்பதால் யாரையும் சாா்ந்து இருக்கும் நிலை இல்லாமல் வாழ்ந்து வந்தனா்.
தற்போது சொட்டு நீா்ப் பாசனம் பயன்படுத்தி விவசாயம் செய்வதால் விவசாய கூலிகளுக்கும் வேலை வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. ஊராட்சியுடன் நல்லூா், நொச்சிக்குட்டை கிராமங்களை இணைப்பதால் வீட்டுவரி, குடிநீா் மற்றும் குப்பை வரி என அதிக வரி கட்ட வேண்டிய சூழ்நிலை உருவாகும். இதனால் ஆயிரக்கணக்கான கிாரம மக்கள் பாதிக்கப்படுவா். அதனால் இந்த இணைப்புத் திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும் என்றனா்.
போராட்டம் குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த நல்லூா் ஊராட்சித் தலைவா் மூா்த்தி, நொச்சிக்குட்டை ஊராட்சித் தலைவா் இளங்கோவன் ஆகியோா் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை சமாதானப்படுத்தினா். மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு அளிக்கலாம் என்று கூறியதையடுத்து பொதுமக்கள் முற்றுகைப் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.