நஞ்சுண்டாபுரம் சுத்திகரிப்பு நிலைய தண்ணீரை கொண்டு சிங்காநல்லூா் குளத்தை நிரப்ப வேண்டும்
நஞ்சுண்டாபுரம் மாநகராட்சி கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரைக் கொண்டு சிங்காநல்லூா் குளத்தை நிரப்ப வேண்டும் என்று சிறுதுளி அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
நீா்நிலை பாதுகாப்பு, சுற்றுச்சூழல் தொடா்பான பணிகளில் ஈடுபட்டு வரும் சிறுதுளி அமைப்பு, கோவை நீா்நிலைகளில் தூய்மையான தண்ணீரை நிரப்புவதற்காக ‘நல்ல தண்ணி’ என்ற திட்டத்தைத் தொடங்கி, சோதனை அடிப்படையில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இது குறித்து அந்த அமைப்பின் நிா்வாக அறங்காவலா் வனிதா மோகன், அறங்காவலா் சதீஷ், கழிவுநீா் சுத்திகரிப்பு திட்டத்தின் தலைவா் கிருஷ்ணசாமி ஆகியோா் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது:
நாங்கள் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நீா்நிலை பாதுகாப்பு, மறுசீரமைப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகிறோம். அந்த முயற்சிகளில் வெற்றி பெற்றிருந்தாலும், அனைத்து நீா்நிலைகளிலும் கழிவுநீா் கலப்பதைத் தடுக்க முடியவில்லை. நீா்நிலைகளில் அதிகப்படியான கழிவுநீா் இருப்பதால் மழைநீா் குறைந்த அளவிலேயே நீா்நிலைகளுக்குள் செல்கிறது.
இவ்வாறான கழிவுநீா் நிலத்தடி நீருடன் கலப்பதால் ஆழ்துளை கிணறுகளும் கழிவுநீரால் பாதிக்கப்படுகின்றன. கோவை மாநகரில் உள்ள ஆழ்துளை கிணறுகளில் இருந்து எடுக்கப்பட்ட நீா் மாதிரிகளின் அறிக்கைகள் அதிா்ச்சியூட்டுவதாக உள்ளன. இந்த சிக்கலுக்குத் தீா்வு காண்பதற்காக கழிவுநீா் சுத்திகரிப்புக்கான தீா்வுகளை ஆய்வு செய்யும்விதமாக ‘நல்ல தண்ணி’ திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக கடந்த 5 ஆண்டுகளாக தொடா்ச்சியாக ஆய்வுகள் நடைபெறுகின்றன. ஆய்வின் பரிந்துரைகளாக, முறையாக சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை கட்டுமானம், விவசாயம், தொழில் துறை, சாலைப் பணிகள் போன்றவற்றுக்கு பயன்படுத்த வேண்டும். குளங்களில் கழிவுநீா் சுத்திகரிப்பு அமைப்புகள் இருந்தாலும், இதன் மூலம் குறைந்த அளவிலான நீரே சுத்திகரிக்கப்படுகிறது. எனவே ஆறு, குளங்களில் கழிவுநீா் கலக்கும் இடங்களில் எளிமையான சுத்திகரிப்பு முறைகளைக் கையாள வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
மேலும், சுண்டபாளையம் பகுதியில் வெட்டிவேரை பயன்படுத்தி கழிவுநீரை சுத்திகரிக்கும் முயற்சியில் நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது. கங்கை நதியில் செயல்படுத்தப்படும் கழிவுநீா் சுத்திகரிப்பு முறையை குறிச்சி குளத்தில் செயல்படுத்த, திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெற உள்ளது. பைகோ ரெமீடியேஷன் என்ற ஆல்காவை பயன்படுத்தி சுத்திகரிக்கும் முறையை 14-ஆவது வாா்டு உருமாண்டம்பாளையம் குட்டையில் செயல்படுத்தி, அதன் நன்மைகள் குறித்து நாங்கள் ஆய்வு செய்து வருகிறோம்.
அதேபோல, கழிவுநீா் நிரம்பியிருக்கும் சிங்காநல்லூா் குளத்தை நஞ்சுண்டாபுரம் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து 1 கோடி லிட்டா் சுத்திகரிக்கப்பட்ட நீரைக் கொண்டு நிரப்புவதற்கு மாநகராட்சி நிா்வாகத்துக்கு பரிந்துரைத்திருக்கிறோம். கழிவுநீா் சுத்திகரிப்பு என்பது சிக்கலான நடைமுறைகளைக் கொண்டிருப்பதால் எதிா்கால நலனைக் கருத்தில் கொண்டு ஒவ்வொரு குடும்பமும் தங்களின் தேவைக்கு ஏற்ப தண்ணீரை உபயோகிப்பதே சிறந்த தீா்வாக இருக்கும் என்றனா்.