நடிப்பிலிருந்து தற்காலிக ஓய்வு மட்டுமே... பாலிவுட் நடிகர் விளக்கம்!
”நான் முழுமையாக ஓய்வு பெறவில்லை. எனது பதிவை மக்கள் தவறாக புரிந்துகொண்டனர்” என நடிகர் விக்ராந்த் மாஸே தெரிவித்துள்ளார்.
பாலிவுட்டில் லூடேரா படத்தின் மூலம் 2013-ல் நடிகராக அறிமுகமானவர் விக்ராந்த் மாஸே. கின்னி வெட்ஸ் சன்னி, தில் ரூபா உள்ளிட்ட படங்களில் நாயகனாக நடித்து ரசிகர்களிடம் பிரபலமடைந்தார்.
கடந்தாண்டு வெளியான ‘12த் ஃபெயில்’ திரைப்படம் மூலம் இந்தியளவில் சிறந்த நடிகராக கவனம் பெற்ற இவருக்கு, அந்தப் படம் பெரிய வெற்றியைப் பெற்றுத் தந்தது.
இறுதியாக, சபர்மதி ரிப்போர்ட் படத்தில் நடித்திருந்த இவர், நடிப்பிலிருந்து விலகி ஓய்வை பெற இருப்பதாக செய்திகள் வெளியாகின.
இதனை, உறுதிப்படுத்தும் விதமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “கடந்த சில ஆண்டுகள் சிறப்பானதாக அமைந்தது. எனக்கு ஆதரவளித்தவர்களுக்கு நன்றி. ஆனால், ஒரு கணவனாக, தந்தையாக, மகனாக இப்போது வீட்டைக் கவனிக்க முடிவெடித்திருக்கிறேன். அடுத்தாண்டு (2025) இறுதியாக ஒருமுறை நாம் சந்திப்போம். எனது கடைசி 2 திரைப்படங்களுடன் பல ஆண்டுகளுக்கான நினைவுகளும் கிடைத்துள்ளன. மீண்டும் நன்றி” என நேற்று பதிவிட்டிருந்தார்.
இதையும் படிக்க | நடிப்பிலிருந்து ஓய்வு! பிரபல நடிகர் அறிவிப்பு!
இந்த அறிவிப்பு பாலிவுட் துறையினருக்கும் அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், அந்தப் பதிவு தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதாக விக்ராந்த் மாஸே விளக்கமளித்துள்ளார்.
இதுதொடர்பாகப் பேசியுள்ள விக்ராந்த் மாஸே, “நான் முழுமையாக ஓய்வு பெறவில்லை. தற்காலிகமாக ஓய்வு தேவைப்படுகிறது. அதனால், ஒரு நீண்ட இடைவெளி எடுக்கவுள்ளேன். எனது உடலையும், வீட்டையும் கவனிக்க முடிவெடித்திருக்கிறேன். மக்கள் அதனைத் தவறாகப் புரிந்துகொண்டனர்” என விளக்கமளித்துள்ளார்.
இவர் நடித்த சபர்மதி ரிப்போர்ட் திரைப்படம் நேற்று மாலை நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர், உள்துறை அமைச்சர் உள்ளிட்ட பலருக்கும் திரையிடப்பட்டது. அந்த நிகழ்வில் கலந்துகொண்ட நடிகர் விக்ராந்த் மாஸே ”என் வாழ்நாளில் இது மறக்கமுடியாத நாளாக இருக்கும்” என்று தனது இன்ஸ்டாகிராம் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.