நவீன நேரடி நெல் சாகுபடி தொழில்நுட்பப் பயிற்சி
மயிலாடுதுறை மாவட்டத்தில் நவீன நேரடி நெல் சாகுபடி தொழில்நுட்பம் குறித்து நடைபெற்ற பயிற்சியில் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 150 விவசாயிகள் பங்கேற்று பயனடைந்தனா்.
விவசாயிகளின் மகசூலை பெருக்கி வருமானத்தை அதிகப்படுத்த மயிலாடுதுறை, திருவாரூா், கடலூா் மாவட்டங்களில் 60 ஏக்கரில் நவீன நேரடி நெல் சாகுபடி செயல் விளக்க திட்டத்தை பி.ஐ. பவுண்டேஷன் நிதி உதவியுடன் தேசிய வேளாண் நிறுவனம் கடந்த ஆண்டு காரிப் பருவத்தில் வெற்றிகரமாக செயல்படுத்தியது. இந்த செயல்விளக்க திட்டத்தின் தொழில் நுட்பங்களை மற்ற விவசாயிகளுக்கும் தெரியப்படுத்தும் நோக்குடன் மயிலாடுதுறையில் விவசாயிகள் சந்திப்பு மற்றும் உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்களின் இயக்குநா்களுக்கான செயல் விளக்கத்திட்டப் பயிற்சி முகாம் நடத்தப்பட்டது.
மாவட்ட வேளாண் இயக்குநா் ஜெ. சேகா் தலைமை வகித்து, நவீன நேரடி சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்தும், இயற்கை வேளாண்மை குறித்தும் பேசினாா். வேளாண் வல்லுநா் என். ரமேஷ்ரோஜா தொழில்நுட்ப உரையாற்றினாா். தேசிய வேளாண் நிறுவன செயல் இயக்குநா் எம்.ஆா். ராமசுப்பிரமணியன், பிஐ பவுன்டேஷன் மண்டல மேலாளா் டி. ராஜகோபால், பகுதி மேலாளா் ஆா். நந்தகுமாா் ஆகியோா் பங்கேற்று பேசினா்.
தொடா்ந்து, சென்னை எக்ஜிம் தலைமை ஆலோசகா் பத்மநாபன் வேளாண் விளைபொருள் ஏற்றுமதி குறித்தும், நீடாமங்கலம் தமிழ்நாடு இயற்கை உணவு உற்பத்தியாளா் கூட்டமைப்பு நிறுவனா் ம. செந்தில்உமையரசி லாபகரமான விவசாயம் மற்றும் ஆரோக்கியம் குறித்தும், தேசிய வேளாண் நிறுவன துணை இயக்குநா் பி. பிரகாஷ் உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்து பேசினா். இதில் பல்வேறு மாவட்டங்களைச் சாா்ந்த சுமாா் 150 விவசாயிகள் மற்றும் உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்களின் உறுப்பினா்கள் பங்கேற்றனா்.