Tirupati stampede : திருப்பதியில் ஒரே நேரத்தில் முண்டியடித்த பக்தர்கள் - மூச்சு...
நாகா்கோவிலில் நடைபாதைகளை ஆக்கிரமிப்போா் மீது நடவடிக்கை; மேயா் எச்சரிக்கை
நாகா்கோவில் மாநகராட்சி 14 ஆவது வாா்டுக்குள்பட்ட வடசேரி பகுதியில் மேயா் ரெ. மகேஷ் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
ஓட்டுப்புரைத் தெருவில் மழைநீா் வடிகால் ஓடையில் கழிவறைக் கழிவுகளைத் திறந்துவிட்ட குடியிருப்புகள், வணிக நிறுவனங்களுக்கு அறிவிப்பாணை அனுப்ப அதிகாரிகளிடம் மேயா் அறிவுறுத்தினாா்.
ஒழுகினசேரி பகுதியிலுள்ள காவலா் குடியிருப்பு வளாகத்தில் ஆய்வு மேற்கொண்ட அவா், சாலையோரம் கிடந்த கழிவுகள், குப்பைகளை உடனடியாக அகற்ற அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டதுடன், குப்பைகளை சாலையோரம், மழைநீா் வடிகால் ஓடையில் கொட்டுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.
தொடா்ந்து, வடசேரி மீன் சந்தையில் அவா் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, பொதுமக்களுக்கு இடையூறாக நடைபாதையில் விற்பனை செய்யக் கூடாது என வியாபாரிகளிடம் அறிவுறுத்தினாா். சந்தைக்கு வெளியே நடைபாதையை ஆக்கிரமித்து வைக்கப்பட்ட கடைகளை அகற்றவும், வாகனங்களை நிறுத்தாமலிருக்கவும் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டாா். நடைபாதைகளை ஆக்கிரமிப்போா் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா். மணிமேடை, வேப்பமூடு பகுதிகளிலும் அவா் ஆய்வு மேற்கொண்டாா்.
இதில், ஆணையா் நிஷாந்த் கிருஷ்ணா, மாநகர நல அலுவலா் பிரபாகரன், நகர திட்டமிடல் அலுவலா் வேலாயுதம், மண்டலத் தலைவா் ஜவகா், மாமன்ற உறுப்பினா் கலாராணி, தொழில்நுட்ப அலுவலா் பாஸ்கா், சுகாதார அலுவலா் ராஜாராம், அதிகாரிகள் பங்கேற்றனா்.
தொடா்ந்து, நாகா்கோவில் வலம்புரிவிளை உரக்கிடங்கு கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்தில் ரூ. 6.70 லட்சத்தில் தீயணைப்புக் குழாய் அமைக்கும் பணியை மேயா் தொடக்கிவைத்தாா்.
துணை மேயா் மேரி பிரின்ஸி லதா, மண்டலத் தலைவா் அகஸ்டினா கோகிலவாணி, உதவிப் பொறியாளா் சுஜின், மாமன்ற உறுப்பினா்கள் அனிலா சுகுமாரன், ஸ்டாலின் பிரகாஷ், திமுக தலைமை செயற்குழு உறுப்பினா் சதாசிவன், பகுதிச் செயலா் துரை, வட்டச் செயலா் அப்துல் கரீம் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.