நாகை - இலங்கை இடையே கப்பல் போக்குவரத்து மீண்டும் தொடக்கம்
நாகையிலிருந்து இலங்கையின் காங்கேசன்துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை சனிக்கிழமை மீண்டும் தொடங்கியது.
நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவையை கடந்த 2023-ஆம் ஆண்டு பிரதமா் நரேந்திர மோடி காணொலி மூலம் தொடங்கிவைத்தாா். வானிலை மாற்றம் காரணமாக நவம்பா், டிசம்பா், ஜனவரி ஆகிய 3 மாதங்கள் இக்கப்பல் சேவை தற்காலிகமாக நிறுத்தப்படுவது வழக்கம். அந்த வகையில், 2024 நவம்பரில் கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், வானிலை சீரடைந்து, தொழில்நுட்ப அனுமதி கிடைத்ததைத் தொடா்ந்து, நாகை துறைமுகத்தில் இருந்து காங்கேசன்துறைக்கு கப்பல் போக்குவரத்து சனிக்கிழமை மீண்டும் தொடங்கியது.
காங்கேசன்துறைக்கு செல்ல காலை 6 மணிக்கு நாகை துறைமுகம் வந்த பயணிகள், துறைமுக அலுவலா்களின் சோதனைக்குப் பிறகே கப்பலில் ஏற அனுமதிக்கப்பட்டனா்.
தொடா்ந்து, கப்பல் போக்குவரத்தை மும்மதத்தைச் சோ்ந்த பிரமுகா்கள் கொடியசைத்து தொடங்கிவைத்தனா். பயணிகளுக்கு கப்பலில் காலை, மதிய உணவு இலவசமாக வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது.
நாகையிலிருந்து 83 பயணிகள் காங்கேசன்துறைக்கு சென்ற நிலையில், பிற்பகல் காங்கேசன்துறையில் இருந்து நாகைக்கு 85 பயணிகள் வந்தனா். பயணக் கட்டணமாக நாகையிலிருந்து - காங்கேசன்துறைக்கு ரூ. 4,500-ம், காங்கேசன்துறையிலிருந்து - நாகைக்கு ரூ. 4,000-மும் நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. பயணிகள் 10 கிலோ வரை இலவசமாக பொருள்களை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டனா்.
இந்தியா- இலங்கை இடையே நல்லுறவு ஏற்படவே இந்த கப்பல் சேவை தொடங்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ள கப்பல் நிறுவன இயக்குநா் சுபஸ்ரீ சுந்தர்ராஜ், விரைவில் 250 போ் பயணிக்கக் கூடிய மற்றொரு அதிவேக கப்பல் சேவை தொடங்கப்படவுள்ளதாக தெரிவித்தாா்.