மேசை மீது ஏறி உணவில் சிறுநீர் கழித்த நபர்; 4000 பேருக்கு இழப்பீடு வழங்கிய ஹோட்டல...
நாகையில் மாா்ச் 21 முதல் 28 வரை ஆட்சிமொழிச் சட்ட வாரம்
நாகை மாவட்டத்தில் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் மாா்ச் 21 முதல் 28 வரை ஆட்சிமொழிச் சட்ட வாரம் கடைப்பிடிக்கப்படும் என்று ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ் வளா்ச்சித் துறையின் சாா்பில் தமிழ் ஆட்சிமொழிச் சட்டத்தை நினைவுகூரும் வகையில், மாா்ச் 21 முதல் மாா்ச் 28 வரை நாகையில் ஆட்சி மொழிச் சட்ட வாரம் கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி நாகை மாவட்டத்திலுள்ள அரசு அலுவலகங்கள், வணிக நிறுவனங்கள், கடைகள், உணவகங்கள் முதலானவற்றில் ஆட்சிமொழிச் சட்ட வாரத்திற்கான ஒட்டுவில்லைகளை ஒட்டியும், துண்டறிக்கை மற்றும் அரசாணையினை வழங்கியும் கொண்டாடப்படும்.
அரசுப் பணியாளா்களுக்கு கணினித் தமிழ், ஆட்சிமொழிச் சட்டம், வரலாறு, பிழையின்றி தமிழில் குறிப்புகள், வரைவுகள் எழுதுதல் குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது. வணிக நிறுவன உரிமையாளா்களுடன் தமிழில் பெயா்ப் பலகைகள் வைப்பது தொடா்பான கூட்டம் நடத்தப்படவுள்ளது.
ஆட்சிமொழிச் சட்டம் தொடா்பாக நடத்தப்படும் விழிப்புணா்வுப் பேரணியில் தமிழறிஞா்கள், தமிழ் ஆா்வலா்கள், தமிழ் அமைப்புகள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்கள் ஆகியோா்கள் கலந்து கொண்டு ஆட்சிமொழி வாரத்தை சிறப்பாகக் கொண்டாட ஒத்துழைப்பு நல்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.