தலித் மாணாக்கர் வெளிநாட்டில் கல்விகற்க அம்பேத்கர் பெயரில் உதவித்தொகை: கேஜரிவால்
நாடாளுமன்ற நுழைவாயிலில் என்ன நடந்தது என்பது உலகத்திற்குத் தெரிய வேண்டாமா? - ப. சிதம்பரம்
நாடாளுமன்ற நுழைவாயிலில் என்ன நடந்தது என்பது மக்கள் தெரிந்துகொள்ள வேண்டாமா? அங்குள்ள கேமராக்களின் பதிவை வெளியிட அரசு ஏன் மறுக்கிறது? என காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
அம்பேத்கர் குறித்து மாநிலங்களவையில் அமித் ஷா பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த இரு நாள்களாக எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தினர்.
கடந்த வியாழக்கிழமை(டிச. 19) அன்று எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற வளாகத்தில் பேரணியாகச் சென்றனர். அப்போது, காங்கிரஸ்தான் அம்பேத்கரை அவமதித்து வருவதாக ஆளும் பாஜகவினர் போராட்டம் நடத்தினர். இதில் இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு பாஜக எம்.பி.க்கள் இருவர் காயமடைந்தனர்.
ராகுல் காந்தி தள்ளிய வேறொரு எம்.பி. தன் மீது விழுந்ததால் தான் விழுந்ததாக காயமடைந்த பாஜக எம்.பி. பிரதாப் சாரங்கி கூறினார். பாஜக எம்.பி.க்கள் தங்களை நாடாளுமன்றத்திற்குள் நுழையவிடாமல் தடுத்ததாக காங்கிரஸ் எம்.பி.க்கள் குற்றம்சாட்டினர்.
இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் தனது எக்ஸ் பக்கத்தில்,
"நாடாளுமன்ற நுழைவாயிலில் பொருத்தப்பட்டுள்ள காமிராக்களின் ஒளி, ஒலி பதிவுகளை வெளியிட வேண்டும் என்பது கோரிக்கை.
இந்த எளிய கோரிக்கையைப் புரிந்துகொள்ள முடியாதா?
இதற்கு 'வெளியிட வேண்டும்' அல்லது 'வெளியிட வேண்டாம்' என்ற இரண்டில் ஒன்றுதானே பதிலாக இருக்க முடியும்?
நேரடியாகப் பதில் சொல்வதை ஏன் அரசு தவிர்க்கிறது?
இந்தக் கோரிக்கைக்குப் பதில் சொல்லாமல் வாதப்பிரதிவாதம், வியாக்கியானம், தத்துவம் எல்லாம் எதற்கு?
நாடாளுமன்ற நுழைவாயிலில் என்ன நடந்தது என்பது உலகத்திற்குத் தெரிய வேண்டாமா?
நுழைவாயிலிலும் நாடாளுமன்ற வளாகத்திலும் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்புக் காமிராக்களில் உள்ள ஒளி, ஒலி பதிவுகளை வெளியிட வேண்டியது தானே?
அந்தப் பதிவுகளை வெளியிடுவதற்கு அரசு ஏன் மறுக்கிறது?
உண்மை என்ன, பொய் என்ன என்பதைப் பதிவுகளை வெளியிட்டால் தெளிவாகத் தெரிந்துவிடுமே?" என்று பதிவிட்டுள்ளார்.