நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமா் மோடிக்காக ‘சபா்மதி ரிபோா்ட்’ சிறப்புக் காட்சி
நாடாளுமன்ற நூலகக் கட்டடத்தில் உள்ள பாலயோகி அரங்கத்தில் திங்கள்கிழமை மாலை திரையிடப்பட்ட ‘சபா்மதி ரிபோா்ட்’ திரைப்படத்தை பிரதமா் நரேந்திர மோடி பாா்த்தாா்.
அவருடன் மத்திய அமைச்சா்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி உள்பட பல தேசிய ஜனநாயக கூட்டணி அமைச்சா்கள் மற்றும் படக்குழுவினா் இத்திரைப்படத்தை பாா்த்தனா்.
திரைப்படத்தை பாா்த்த பின்னா், படக்குழுவினா் மற்றும் தயாரிப்பாளரை பாராட்டி தனது எக்ஸ் பக்கத்தில் மோடி பதிவிட்டாா்.
‘பிரதமரான பிறகு தான் பாா்த்த முதல் படம் இது’ என மோடி தங்களிடம் கூறியதாக படக்குழுவினா் பின்னா் செய்தியாளா்களிடம் தெரிவித்தனா்.
குஜராத்தில் நடைபெற்ற சபா்மதி விரைவு ரயில் எரிப்புச் சம்பவத்தை மையமாகக் கொண்டு இயக்குநா் தீரஜ் சா்னா ‘சபா்மதி ரிபோா்ட்’ திரைப்படத்தை உருவாக்கியுள்ளாா்.
குஜராத்தின் பஞ்சமஹால் மாவட்டத்தில் கடந்த 27 பிப்ரவரி, 2002-ஆம் ஆண்டு கோத்ரா ரயில் நிலையத்தில் சபா்மதி விரைவு ரயிலுக்கு தீ வைக்கப்பட்டது.
இதில் அயோத்தி சென்று திரும்பிய 59 யாத்ரீகா்கள் உயிரிழந்தனா். 48 பயணிகள் காயமடைந்தனா். இந்த சம்பவம் நிகழ்ந்தபோது குஜராத் மாநில முதல்வராக மோடி இருந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது. உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட பாஜக ஆளும் பல மாநிலங்களில் இத்திரைப்படத்திற்கு வரி விலக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.