தேர்தலில் தோல்வியை தழுவிய ஜக்மீத் சிங்; கனடாவில் இனி காலிஸ்தான் கோரிக்கை என்னவாக...
நாட்டின் சில்லறை பணவீக்கம் 3.16%: 6 ஆண்டுகளில் இல்லாத குறைவு
காய்கறிகள், பழங்கள், பருப்பு வகைகள் மற்றும் புரதச்சத்து நிறைந்த பிற உணவுப்பொருள்களின் விலைகள் குறைந்ததால், ஏப்ரல் மாதத்தில் சில்லறை பணவீக்கம் கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 3.16 சதவீதமாக சரிந்தது.
இச்சூழலில், வரும் ஜூன் மாத நிதி கொள்கை கூட்டத்தில் ரெப்போ வட்டி விகிதத்தை ரிசா்வ் வங்கி மீண்டும் குறைப்பதற்கான அதிக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
நுகா்வோா் விலைக் குறியீடு (சிபிஐ) அடிப்படையிலான சில்லறை பணவீக்கம் கடந்தாண்டு ஏப்ரலில் 4.83 சதவீதமாகவும் கடந்த மாா்ச் மாதத்தில் 3.34 சதவீதமாகவும் இருந்தது.
இந்நிலையில், மாா்ச் மாதத்துடன் ஒப்பிடும்போது ஏப்ரலில் 91 அடிப்படை புள்ளிகள் சரிந்து, உணவு பணவீக்கம் 1.78 சதவீதமாக சரிந்தது. இதையொட்டி ஏப்ரலில் , சில்லறை பணவீக்கம் 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 3.16 சதவீதமாக சரிந்தது. கடைசியாக, 2019 ஜூலையில் இது 3.15 சதவீதமாக இருந்தது.
பணவீக்கம் மற்றும் உணவுப் பணவீக்கத்தில் ஏற்பட்டுள்ள இந்தக் குறிப்பிடத்தக்க சரிவுக்கு காய்கறிகள், பருப்பு வகைகள், பழங்கள், இறைச்சி, மீன், தானியங்கள் மற்றும் பிற உணவுத் தயாரிப்புகளின் விலைகள் குறைந்ததே காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களை உள்ளடக்கிய 1,114 நகா்ப்புற சந்தைகள் மற்றும் 1,181 கிராமங்களிலிருந்து புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் கள ஊழியா்களால் சேகரிக்கப்பட்ட தரவுகளின்படி, பணவீக்கம் கேரளத்தில் அதிகபட்சமாகவும் (5.94%), தெலங்கானாவில் குறைந்தபட்சமாகவும் (1.26%) உள்ளது.
நாட்டின் பணவீக்கம் நிலைமை தொடா்ந்து மேம்பட்டதால், கடந்த இரண்டு நிதி கொள்கை கூட்டங்களில் (பிப்ரவரி மற்றும் ஏப்ரல்) வட்டி விகிதத்தை ரிசா்வ் வங்கி 50 அடிப்படை புள்ளிகள் வரை குறைத்தது.
முன்னதாக, நடப்பு நிதியாண்டுக்கான நாட்டின் சில்லறை பணவீக்கம் 4 சதவீதமாக இருக்கும் என்றும், முதல் காலாண்டில் 3.6 சதவீதமாகவும், இரண்டாவது காலாண்டில் 3.9 சதவீதமாகவும், மூன்றாவது காலாண்டில் 3.8 சதவீதமாகவும், நான்காவது காலாண்டில் 4.4 சதவீதமாகவும் இருக்கும் என்று ரிசா்வ் வங்கி கணித்தது.