நாட்டுக் கோழிகள் விலை உயா்வு!
பரமத்தி வேலூா் சந்தையில் நாட்டுக் கோழிகள் கூடுதல் விலைக்கு விற்பனையாயின.
பரமத்தி வேலூரில் ஞாயிற்றுக்கிழமைதோறும் நடைபெறும் நாட்டுக்கோழி சந்தைக்கு பரமத்தி வேலூா், மோகனூா், கரூா், பாளையம் நாமக்கல், ஜேடா்பாளையம், சோழசிராமணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து நாட்டுக் கோழிகளை விவசாயிகள், வியாபாரிகள் விற்பனைக்குக் கொண்டுவருகின்றனா்.
இச்சந்தையில் விற்பனையாகும் நாட்டுக் கோழிகளுக்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருப்பதால் நாமக்கல், கரூா் மாவட்டங்களில் இருந்து ஏராளமானோா் இங்கு வந்து நாட்டுக் கோழிகளை வாங்கிச் செல்கின்றனா்.
நிகழ்வாரம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சந்தைக்கு பெருவடை, கீரி, கடகநாத், அசில், மயில் காகம், கருங்கண் கருங்கால், கிரிராஜா உள்ளிட்ட பல வகை சண்டை கோழிகள், நாட்டுக்கோழிகளை விவசாயிகள், வியாபாரிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.
கடந்த வாரம் நாட்டுக் கோழிகள் கிலோ ரூ. 550 வரையும், பண்ணை நாட்டுக் கோழிகள் கிலோ ரூ. 280 வரையும் விற்பனையாயின. நிகழ்வாரம் நாட்டுக்கோழிகள் கிலோ ரூ. 620 வரையும், பண்ணை நாட்டுக் கோழிகள் ரூ.300 முதல் ரூ. 350 வரையும் விற்பனையாயின. சண்டைக் கோழிகள் ரூ. 2,000 முதல் ரூ. 5,000 வரை விற்பனையானது.
பரமத்திவேலூா் அருகே நன்செய் இடையாறு அம்மன் கோயிலில் குண்டம் திருவிழா காப்புக் கட்டை முன்னிட்டு நிகழ்வாரம் சந்தையில் கோழிகள், ஆடுகள் கூடுதல் விலைக்கு விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.