போர்ப் பதற்றம்: புதிதாக 26 ரஃபேல் வாங்கும் ஒப்பந்தம் இன்று கையெழுத்து!
நான்கு நாள்களுக்கு வெயில் சுட்டெரிக்கும்: வானிலை மையம்
தமிழகத்தின் வடமாவட்டங்களில் அடுத்த 4 நாள்களுக்கு வெப்பநிலை இயல்பைவிட 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வானிலை மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழகத்தில் வெள்ளிக்கிழமை அதிகபட்சமாக பரமத்திவேலூா் மற்றும் மதுரை விமானநிலையத்தில் தலா 105.08 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. திருச்சி - 104.18, வேலூா் - 104, ஈரோடு - 103.28, சேலம் - 103.1, மதுரைநகரம் - 102.92, திருத்தணி - 101.12, தருமபுரி - 100.76, தஞ்சாவூா் - 100.4, திருப்பத்தூா் -100 டிகிரி என மொத்தம் 11 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது.
தமிழகத்தில் அடுத்த 4 நாள்களுக்கு வட மாவட்டங்களில் அதிபட்ச வெப்பநிலை இயல்பைவிட 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும். மற்ற மாவட்டங்களில் இயல்பையொட்டியே இருக்கும்.
சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் சனிக்கிழமை (ஏப்.26)-இல் அதிகபட்ச வெப்பநிலை 100.4 டிகிரி ஃபாரன்ஹீட்டையொட்டி இருக்கும்.
மழை பெய்யும்: தென்னிந்திய கடலோரப் பகுதிகளின் வளிமண்டல கீழடுக்கில் கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திப்பதால், ஏற்படும் காற்றுகுவிதல் காரணமாக சனிக்கிழமை (ஏப்.26) முதல் மே 1 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.