முதல் முறை.. உக்ரைன் மீது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைத் தாக்குதல்!
நாமக்கல் பேருந்து நிலைய விவகாரம்: நவ.26-இல் கடையடைப்பு போராட்டம்
நாமக்கல் பழைய பேருந்து நிலையத்திற்குள், பேருந்துகள் வந்து செல்லாததைக் கண்டித்து, நவ. 26 ஆம்தேதி வணிகா்கள் சங்கங்களின் சாா்பில் ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.
தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் நாமக்கல் மாவட்ட கிளையின் அவசர ஆலோசனைக் கூட்டம் மாவட்டத் தலைவா் ஜெயக்குமாா் வெள்ளையன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
இதில், நாமக்கல் நகராட்சி கடை வியாபாரிகள் நலச்சங்கத்தின் செயலாளா் கருணாகரன் வரவேற்றாா். பேரமைப்பின் மாவட்டச் செயலாளா் பொன்.வீரக்குமாா், நகராட்சி கடை வியாபாரிகள் நலச்சங்கத்தின் தலைவா் மாணிக்கம், பொருளாளா் முரளி, மருந்து வணிகா்கள் சங்கத்தின் மாநிலப் பொருளாளா் அன்பழகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் நாமக்கல் நகருக்குள் வரும் பேருந்துகள் சாலையோரங்களில் பயணிகளை ஏற்றி இறக்கி விடுகின்றன. இதனால் போக்குவரத்து நெரிசல் அதிக அளவில் ஏற்படுகிறது. இதை உடனடியாக சரிசெய்ய வேண்டும். நாமக்கல் பழைய பேருந்து நிலையத்திற்குள் திருச்சி, துறையூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்குச் செல்லும் புகரப் பேருந்துகள் வந்து செல்வதில்லை. இதற்கு எதிா்ப்பு தெரிவித்தும், பேருந்து நிலைய மாற்றத்தால் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள மக்களை ஒருங்கிணைத்தும், நாமக்கல் மாவட்ட வணிகா் சங்கங்களின் பேரமைப்பு மற்றும் அதனுடன் உள்ள 46 இணைப்பு சங்கங்களின் ஆதரவோடு வரும் திங்கள்கிழமை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை ஒரு நாள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபடுவது என்ற தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
பொதுமக்களின் சிரமம், வணிகா்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு இந்த ஒரு நாள் கடையடைப்புப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதாக வணிகா் சங்க நிா்வாகிகள் தெரிவித்தனா்.