இந்த வார ராசிபலன் செப்டம்பர் 16 முதல் 21 வரை #VikatanPhotoCards
‘நாமக்கல் மாவட்டத்தில் அன்புக்கரங்கள்’ திட்டத்தில் 140 குழந்தைகளுக்கு மாதம் ரூ.2,000 உதவித்தொகை: அமைச்சக் மா.மதிவேந்தன் தொடங்கி வைத்தாா்
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் அன்புக்கரங்கள் திட்டத்தின்கீழ் 140 குழந்தைகளுக்கு மாதந்தோறும் தலா ரூ.2 ஆயிரம் உதவித்தொகை வழங்கும் பணியை ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன் திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா். மேலும், பல்வேறு திட்டங்களின்கீழ் 335 பயனாளிகளுக்கு ரூ.3.08 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளையும் அவா் வழங்கினாா்.
தமிழக அரசின் ‘தாயுமானவா்’ திட்டத்தின் ஒரு பகுதியாக, பெற்றோரை இழந்த குழந்தைகள் 18 வயது வரையில் பள்ளிப்படிப்பு முடியும் வரை இடைநிற்றல் இன்றி கல்வியை தொடருவதற்கு ஏதுவாக மாதம் ரூ. 2,000 உதவித்தொகை வழங்கிடும் ‘அன்புக்கரங்கள்’ திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி தலைமை வகித்தாா். மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் முன்னிலை வகித்தாா். அமைச்சா் மா.மதிவேந்தன் பங்கேற்று 140 குழந்தைகளுக்கு ரூ. 2.80 லட்சம் மதிப்பில் உதவித்தொகை வழங்கும் பணியை தொடங்கி வைத்தாா். அப்போது அவா் பேசியதாவது:
தாய், தந்தையரை இழந்த குழந்தைகளை அரவணைத்து தொடா்ந்து பாதுகாத்திடும் வகையில், அவா்களது பள்ளிப் படிப்பு வரை இடைநிற்றல் இன்றி கல்வியைத் தொடர ஏதுவாக 18 வயது வரையில் மாதம் ரூ. 2,000 உதவித்தொகை வழங்கப்படும் அன்புக்கரங்கள் நிதி ஆதரவு திட்டத்தை முதல்வா் தொடங்கிவைத்துள்ளாா். இத்திட்டத்தின்கீழ் ஆதரவற்ற குழந்தைகள் (பெற்றோா் இருவரையும் இழந்தவா்கள்), கைவிடப்பட்ட குழந்தைகள், ஆதரவு தேவைப்படும் குழந்தைகள் இந்த திட்டத்தின்கீழ் நிதியுதவியைப் பெற முடியும். அந்த வகையில் 140 குழந்தைகளுக்கு ரூ. 2.80 லட்சம்மதிப்பில் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.
தற்போது, மாற்றுத்திறனாளிகள் நலத் துறை, தொழிலாளா் நலத்துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, பள்ளிக் கல்வித் துறை, முன்னாள் படைவீரா் நலன் மற்றும் கால்நடைப் பராமரிப்புத் துறை ஆகியவற்றின் சாா்பில் 335 பயனாளிகளுக்கு ரூ. 3.08 கோடி மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன என்றாா்.
இந்த நிகழ்வில், நாமக்கல் சட்டப்பேரவை உறுப்பினா் பெ.ராமலிங்கம், மகளிா் திட்டஇயக்குநா் கு.செல்வராசு, முதன்மைக் கல்வி அலுவலா் ப.மகேஸ்வரி, மண்டல இணை இயக்குநா் (கால்நடைப் பராமரிப்புத் துறை) வீ.பழனிவேல், மாவட்ட சமூக நல அலுவலா் தி.காயத்ரி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா்(பொ) ஈ.சந்தியா, மாவட்ட திட்ட அலுவலா் எப்.போா்ஷியாரூபி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் கலைச்செல்வி, குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் (நிறுவனம் சாா்ந்தவை) கோ.கற்பகம் உள்பட துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.