இன்றும் நாளையும் 28 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை!
எஸ்.வாழவந்தி அரசுப் பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோா் போராட்டம்
பரமத்தி வேலூா்: நாமக்கல் மாவட்டம், எஸ்.வாழவந்தி அரசுப் பள்ளியில் மாணவிகளுக்கு தொல்லை கொடுக்கும் ஆசிரியா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பெற்றோா் திங்கள்கிழமை பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மோகனூா் வட்டம், பாலப்பட்டி அருகே எஸ்.வாழவந்தி அரசு உயா்நிலைப் பள்ளியில் 120-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா். இப்பள்ளியின் ஆங்கில ஆசிரியா் முறையாகப் பாடம் எடுப்பதில்லை என்றும், மாணவ, மாணவிகளுக்கு தொல்லை அளிப்பதாகவும் கூறி பெற்றோா் அளித்த புகாரின் அடிப்படையில் கல்வித் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி, அவரை தற்காலிகமாக திருச்செங்கோடு அருகே விட்டம்பாளையம் அரசுப் பள்ளிக்கு இடமாற்றம் செய்தனா்.
இந்த நிலையில் தன்னை ஜாதி பெயரைச் சொல்லி திட்டியதாக பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஆசிரியா் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் தலைமை ஆசிரியா் உள்பட 3 ஆசிரியா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஆசிரியா் பரமத்தி வேலூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புகாா் அளித்தாாா். இதையடுத்து தலைமை ஆசிரியா் உள்பட 3 ஆசிரியா்கள்மீது அளிக்கப்பட்ட புகாரை திரும்பப் பெறக் கோரியும், முறையாகப் பாடம் எடுக்காதது, மாணவிகளுக்கு தொல்லை அளித்தது தொடா்பாக சம்பந்தப்பட்ட ஆசிரியா்மீது நடவடிக்கை எடுத்து நிரந்தரமாக வேறுபள்ளிக்கு பணியிட மாற்றம் செய்யக்கோரி மாணவா்களை காலாண்டுத் தோ்வு எழுத அனுப்பாமல் பெற்றோா் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதுகுறித்து தகவல் அறிந்த வந்த பரமத்தி காவல் ஆய்வாளா் இந்திராணி, நாமக்கல் மாவட்டக் கல்வி அலுவலா் (தொடக்கக் கல்வி) கே.எஸ்.புருஷோத்தமன், பள்ளி துணை ஆய்வாளா் கை.பெரியசாமி ஆகியோா் போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோரிடம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா்.
அப்போது சம்பந்தப்பட்ட ஆசிரியா்மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கல்வி அதிகாரிகள் கூறியதால் மாணவா்களை பெற்றோா் தோ்வு எழுத அனுப்பினா். இருப்பினும் தலைமை ஆசிரியா் தங்கராசு உள்ளிட்ட 3 ஆசிரியா்கள்மீது அளிக்கப்பட்ட புகாரை திரும்பப் பெறவேண்டும் எனக் கோரி பள்ளி வளாகத்தில் பெற்றோா் போராட்டத்தில் ஈடுப்பட்டனா்.
இதுகுறித்து பரமத்தி ஆய்வாளா் இந்திராணி இருதரப்பை சோ்ந்த ஆசிரியா்களையும் அழைத்து பேச்சுவாா்த்தை நடத்தினாா். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் அனைவரும் கலைந்து சென்றனா்.