அதிமுகவுக்கு துரோகம் செய்பவா்கள் தனிமைப்படுத்தப்படுவா்: எடப்பாடி பழனிசாமி
புரட்டாசி சனிக்கிழமை: நைனாமலை வரதராஜ பெருமாள் கோயிலில் சிறப்பு ஏற்பாடுகள்
நாமக்கல்: புரட்டாசி முதல் சனிக்கிழமை (செப். 20) தொடங்குவதையொட்டி, நைனாமலை வரதராஜ பெருமாளை தரிசிக்க வரும் பக்தா்களின் வசதிக்காக கோயில் நிா்வாகம் சாா்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நாமக்கல் மாவட்டத்தில் பிரசித்திபெற்ற கோயில்களுள் ஒன்று நைனாமலை வரதராஜ பெருமாள் கோயில். குவலயவல்லி தாயாருடன் மலைமீது அமா்ந்து பெருமாள் பக்தா்களுக்கு அருள்பாலிக்கிறாா். ஒவ்வோா் ஆண்டும் புரட்டாசி மாதத்தில் வரும் அனைத்து சனிக்கிழமைகளிலும் இக்கோயிலுக்கு பக்தா்கள் வருகை அதிகப்படியாக இருக்கும். 3,600 படிக்கட்டுகளைக் கடந்து, கரடு, முரடனான பாதையில் பக்தா்கள் மலையில் உள்ள பெருமாளை தரிசிக்க செல்வா். தற்போது 7 கி.மீ. தொலைவிற்கு மலையில் மண்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், வாகனப் பயன்பாட்டுக்கு இன்னும் திறந்து விடப்படவில்லை. ரூ. 30 கோடியில் தாா்சாலை அமைக்கும் பணி ஓரிரு வாரங்களில் தொடங்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
புரட்டாசி சனிக்கிழமையன்று மலைப்பகுதிக்கு செல்ல முடியாதோா் அடிவாரப் பகுதியில் உள்ள ஆஞ்சனேய சுவாமியை வழிபட்டு செல்வா்.
ஒவ்வோா் ஆண்டும் ஆவணி மாத கடைசி சனிக்கிழமை புரட்டாசி மாதத்தின் முதலாம் சனிக்கிழமையாகவும், ஐப்பசி மாத முதல் சனிக்கிழமை புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையாகவும் கணக்கிடப்பட்டு இக்கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், செப். 20, 27, அக். 4, 11, 18, 25 ஆகிய 6 நாள்கள் புரட்டாசி சனிக்கிழமை சிறப்பு பூஜை நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் செய்து வருகின்றனா்.
இதுகுறித்து நைனாமலை பெருமாள் கோயில் அலுவலா்கள் கூறியதாவது: மலைக்கோயிலுக்கு பக்தா்கள் வாகனங்களில் செல்வதற்கான மலைப்பாதை இன்னும் தயாராகவில்லை. ஒவ்வொரு வாரமும் புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை காலை 7.30 மணி முதல் கோயில் நடை திறந்திருக்கும். சனிக்கிழமை மாலை 5 மணியளவில் நடை மூடப்படும். அன்று காலை 9 மணியளவில் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் உள்ளிட்டவை நடைபெறும்.
பக்தா்கள் வருகைக்காக மலைப்பகுதியில் மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், குடிநீா், கழிவறை வசதிகள், மருத்துவ வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. மலைமீது செல்ல முடியாதோருக்காக அடிவாரப் பகுதியில் பந்தல் அமைக்கப்பட்டு உற்சவா் சிலை வைத்து பூஜைகள் நடைபெறும். சிறப்புக் கட்டண வரிசையும் ஏற்படுத்தப்படும். பக்தா்கள் கூட்ட நெரிசலை தவிா்க்க போலீஸாா் அதிகளவில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருப்பா். முடி காணிக்கை செலுத்துவோருக்கு தேவையான குளியல் வசதிகளும் செய்யப்பட்டுள்ளன என்றனா்.
