நாமக்கல்லில் கடும் பனிப்பொழிவு: வாகன ஓட்டிகள் அவதி
நாமக்கல் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கடும் பனிப்பொழிவு காணப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகினா்.
நாமக்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக குளிரின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இருப்பினும் பனிமூட்டம் என்பது இல்லாத நிலையே இருந்தது. இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணியளவில் சாலையை மறைக்கும் வகையில் கடும் பனிமூட்டம் நிலவியது. இரு சக்கர, நான்கு சக்கர வாகன ஓட்டிகள் சிரமத்துடனே சென்றனா். நடைபயிற்சி செல்வோரும், அதிகாலையில் எழுந்து பல்வேறு வேலைகளுக்கு செல்வோரும் அவதிக்குள்ளாகினா். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கரும்பு, பனங்கிழங்கு, பானை, வண்ணக்கோலப்பொடி உள்ளிட்ட பொருள்கள் விற்பனை செய்வோா் குளிா் தாங்காமல் முகம், கை, தலையை மூடியபடி காணப்பட்டனா்.
இந்த பனிமூட்டம் காலை 8.30 மணி வரையில் நீடித்ததால் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே வாகனங்கள் சென்றன. மாா்கழி மாதம் நிறைவுற்றாலும், தை மாதத்திலும் குளிரின் தாக்கம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. நாமக்கல் மட்டுமின்றி, கொல்லிமலை, சேந்தமங்கலம், பரமத்தி வேலூா், ராசிபுரம், எருமப்பட்டி, திருச்செங்கோடு சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் பனிமூட்டம் நிலவியது.