நாளை சூரியன் மறைவதற்குள் எல்லை ஊடுருவல் நிறுத்தப்படும்! டிரம்ப் சூளுரை
நாளை சூரியன் மறைவதற்குள் அமெரிக்க எல்லையில் ஊடுருவல் என்பது முற்றிலும் நிறுத்தப்படும் என்று அதிபராக பொறுப்பேற்கவுள்ள டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்டு டிரம்ப் 47 ஆவது அதிபராக திங்கள்கிழமை காலை 11.30 மணியளவில் (உள்ளூர் நேரப்படி) பதவியேற்கவுள்ளார்.
இதற்கு முன்னதாக வாஷிங்டனுக்கு வருகைதந்த டிரம்ப், கேபிடல் ஒன் அரங்கில் கூடியிருந்த தனது ஆதரவாளர்கள் மத்தியில் ஞாயிற்றுக்கிழமை இரவு வெற்றி உரையாற்றினார்.
அப்போது, நாளை சூரியன் மறைவதற்குள் அமெரிக்க எல்லையில் ஊடுருவல் என்பது முற்றிலும் நிறுத்தப்படும் என்று ஆதரவாளர்கள் மத்தியில் தெரிவித்தார்.
இதையும் படிக்க : கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை: சஞ்சய் ராய்க்கு ஆயுள் தண்டனை!
மேலும், அவர் பேசியதாவது:
“வெனிசுலாவில் இருந்து அலைஅலையாக அமெரிக்காவுக்குள் நுழைந்த ட்ரென் டி அரகுவா அமைப்பின் உறுப்பினர்கள் வெளியேற்றப்படுவார்கள்.
அமெரிக்க வரலாற்றில் அதிபரின் மிகச் சிறந்த முதல் நாள் அமைய இருக்கிறது. மிகவும் அசாதாரணமான முதல் 100 நாள்களை மக்களுக்கு வழங்கப் போகிறோம்.
நாடு எதிர்கொள்ளும் ஒவ்வொரு நெருக்கடியையும் சரிசெய்தற்கான பல உத்தரவுகளை இயற்றவுள்ளேன். ஜோ பைடன் வெளியிட்ட பல உத்தரவுகளை ரத்து செய்வேன்.
நாளை நண்பகலில், நான்கு ஆண்டுகால அமெரிக்க வீழ்ச்சிப் பாதை மூடப்படும். வலிமை, செழிப்பு, கண்ணியம் மற்றும் பெருமையின் புத்தம்புதிய காலத்தை அமெரிக்கா தொடங்கும்.
அமெரிக்க அதிபர் ஜான் எஃப். கெடி, செனட்டர் ராபர்ட் கென்னடி மற்றும் சிவில் உரிமைகள் தலைவர் மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் ஆகியோரின் படுகொலைகள் தொடர்பான மீதமுள்ள ஆவணங்களை வெளியிடுவேன்” எனத் தெரிவித்தார்.
கடந்த 2017 தேர்தலின்போதும் இதேபோன்ற வாக்குறுதி அளித்த டிரம்ப், கொலைகள் தொடர்பான சில ரகசிய ஆவணங்களை மட்டுமே வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.