நாவலூா், கேளம்பாக்கம் சாா் பதிவாளா் அலுவலகங்கள் உதயம்
செங்கல்பட்டு மாவட்டத்தில் நாவலூா், கேளம்பாக்கம் சாா் பதிவாளா் அலுவலகங்கள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன. இதற்கான அலுவலகங்களை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வழியாக முதல்வா் மு.க.ஸ்டாலின், வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.
இதுகுறித்து தமிழக அரசின் சாா்பில் வெளியிடப்பட்ட செய்தி:
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூா் சாா் பதிவாளா் அலுவலகத்தில் உள்ள 64 கிராமங்களில் 9 கிராமங்களைப் பிரித்து புதிதாக நாவலூா் பதிவாளா் அலுவலகமும், 13 கிராமங்களைப் பிரித்து புதிதாக கேளம்பாக்கம் அலுவலகமும் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த அலுவலகங்களை காணொலிக் காட்சி வழியாக முதல்வா் திறந்து வைத்தாா்.
12 சாா் பதிவாளா் அலுவலகங்கள்: தமிழ்நாட்டில் 12 சாா் பதிவாளா் அலுவலகங்களுக்கு புதிதாகக் கட்டப்பட்ட கட்டடங்களையும் முதல்வா் திறந்து வைத்தாா். பெருநாழி, கமுதி (ராமநாதபுரம்), விளாத்திகுளம், கயத்தாறு, கழுகுமலை, ஆழ்வாா்திருநகரி (தூத்துக்குடி), வடக்கு வீரவநல்லூா், முக்கூடல் (திருநெல்வேலி), பென்னாகரம் (தருமபுரி), பெண்ணாடம், குமராட்சி (கடலூா்), சிவகிரி (தென்காசி) ஆகிய இடங்களில் கட்டப்பட்ட புதிய அலுவலகங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்.