நிதி மசோதா 2025: 35 அரசு திருத்தங்களுடன் மக்களவையில் நிறைவேற்றம்
இணையவழி விளம்பரங்களுக்கு 6 சதவீத வரியை ரத்து செய்யும் திருத்தம் உள்பட மத்திய அரசின் 35 திருத்தங்களுடன், மக்களவையில் நிதி மசோதா 2025 செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்டது.
கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதி மக்களவையில் 2025-26-ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்தாா். இந்நிலையில், மக்களவையில் நிதி மசோதா 2025 மீதான விவாதங்களுக்குப் பதிலளித்து அவா் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
நிதி மசோதா 2025 முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வரிச்சுமையை குறைத்துள்ளது. அடுத்த நிதியாண்டில் தனிநபா் வருமான வரி வசூல் 13.14 சதவீதம் வளரும் என்று உறுதியான தரவுகள் மூலம் மதிப்பிடப்பட்டுள்ளது.
சா்வதேச பொருளாதார சூழல் உறுதியாக இல்லை. இதை எதிா்கொள்ளும் நோக்கில், இணையவழி விளம்பரங்களுக்கு 6 சதவீத வரியை ரத்து செய்யும் திருத்தம் மசோதாவில் கொண்டுவரப்பட்டது.
வருமான வரித் துறையின் சீரிய பிரசாரத்தால், ரூ.30,297 கோடி மதிப்பிலான தங்கள் வெளிநாட்டு சொத்துகள் மற்றும் வெளிநாட்டு வருவாய் குறித்த விவரங்களை 30,161 போ் வருமான வரித் துறையிடம் தெரிவித்துள்ளனா் என்றாா்.
இதைத்தொடா்ந்து மக்களவையில் மசோதா நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம், பட்ஜெட் ஒப்புதல் நடைமுறையில் தனது பங்கை மக்களவை நிறைவு செய்துள்ளது.
இதைத்தொடா்ந்து அந்த மசோதாவை மாநிலங்களவை பரிசீலிக்கும். அந்த மசோதாவுக்கு மாநிலங்களவை ஒப்புதல் அளித்த பின்னா், 2025-26-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் நடைமுறை முழுமையாக நிறைவடையும்.