செய்திகள் :

நியோமேக்ஸ் மோசடி: ரூ.15.5 கோடி சொத்துகளை விற்று பாதிக்கப்பட்டோருக்கு வழங்க போலீஸ் நடவடிக்கை

post image

மதுரை: ‘நியோமேக்ஸ்' நிறுவன மோசடி வழக்கில் காவல் துறையால் கையகப்படுத்தப்பட்ட ரூ.15.5 கோடி மதிப்பிலான சொத்துகளை விற்று, பாதிக்கப்பட்டோருக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மதுரை பொருளாதார குற்றப் பிரிவு போலீஸார் தெரிவித்துள்ளனர்.

மதுரையை மையமாகக் கொண்டு செயல்பட்ட ‘நியோமேக்ஸ்’ என்ற ரியல் எஸ்டேட் நிறுவனம் மற்றும் அதன் துணை நிறுவனங்கள் முதலீட்டுக்கு கூடுதல் வட்டி, இரட்டிப்பு பணம் வழங்குவதாக நம்பவைத்து லட்சக்கணக்கான முதலீட்டாளர்களைச் சேர்த்தனர். இந்த சங்கலி தொடரில் மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, நெல்லை, கன்னியாகுமரி, திருச்சி, தஞ்சை என, தமிழகம் முழுவதும் உள்ளவர்கள் கோடிக்கணக்கில் முதலீடுகளை செய்தனர்.இந்நிலையில், சொன்னபடி பணத்தைத் திருப்பித் தராமல் முதலீட்டாளர்களை ஏமாற்றி மோசடி செய்ததாக ‘நியோமேக்ஸ்’ நிறுவனங்களுக்கு எதிராக கடந்த ஓராண்டுக்கு முன்பு புகார்கள் எழுந்தன.மதுரை, திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு போலீஸில் தொடர்ந்து புகார்கள் குவிந்தன. வழக்குகளும் பதிவாகின.இதையடுத்து, ‘நியோமேக்ஸ்’ நிறுவனங்களுக்கு எதிரான புகார்களை ஒருங்கிணைத்து மதுரையில் விசாரிக்க, சிறப்பு டிஎஸ்பி-யான மணிஷா விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அவரது தலைமையில் தனிப்படையினர் பாதிக்கப்பட்டோரின் புகார்கள் குறித்து விசாரித்தனர். இதையடுத்து, நியோமேக்ஸ் நிறுவணத்தின் நிர்வாக இயக்குநர்களான மதுரை கமலக் கண்ணன், பாலசுப்பிரமணியன், திருச்சி வீரசக்தி உள்ளிட்ட நாற்பதுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் சிலர் ஜாமீனிலும் வந்துவிட்டனர். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

இதற்கிடையில், இந்த வழக்கில் தலைமறைவாக இருக்கும் நபர்களை போலீஸார் தேடிவருவதாகச் சொல்லப்படுகிறது. ‘நியோமேக்ஸ்’ நிறுவனங்களுக்கு எதிரான நடவடிக்கையின் ஒரு பகுதியாக அந்த நிறுவனங்களுக்குச் சொந்தமான கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புடைய அசையும், அசையா சொத்துகளை போலீஸார் கையகப்படுத்தி உள்ளனர். இதில், விலையுயர்ந்த கார்களும், இதர பொருட்களும் அடக்கம். நியோமேக்ஸ் சொத்துகளை கையகப்படுத்தும் பணி இன்னமும் தொடரும் நிலையில், ஏற்கெனவே கையக்கபடுத்தப்பட்ட சொத்துகளை விற்று, பாதிக்கப்பட்டோருக்கு பகிர்ந்து அளிக்கவும் அரசிடம் காவல்துறை அனுமதி பெற்றுள்ளதாக தெரிகிறது.

இது குறித்து மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் தரப்பில் நம்மிடம் பேசியவர்கள்,“ ‘நியோமேக்ஸ்’ வழக்கில் பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. முக்கிய நபர்களின் வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன. இதனிடையில், சுமார் ரூ. 11.5 கோடி மதிப்புள்ள சொத்துகளை விற்க அரசிடமும், நீதிமன்றத்திடமும் உரிய அனுமதி பெற்றுள்ளோம்.

அத்துடன் மேலும் ரூ.4 கோடி மதிப்பிலான சொத்துகளை விற்கவும் அனுமதி பெறஉள்ளோம். இதன்மூலம் ரூ. 15.5 கோடி சொத்துகளை விற்று, அதன்மூலம் கிடைக்கும் பணத்தை பாதிக்கப்பட்டோருக்கு உரிய வழிகாட்டுதலின்படி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்றனர்.