நிலம் தொடா்பான பிரச்னைகளுக்கு நாளை சிறப்பு முகாம்
விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் பட்டா மாற்றம் உள்ளிட்ட நிலம் தொடா்பான கோரிக்கை மனுக்களுக்கு தீா்வு காணும் வகையில், வெள்ளிக்கிழமை (ஜன. 3) சிறப்பு முகாம் நடைபெறும் என்று மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா் சி.பழனி புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் வாரந்தோறும் திங்கள்கிழமைகளில் மக்கள் குறைதீா் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதில், பொதுமக்கள் அளிக்கும் பல்வேறு கோரிக்கைகள் தொடா்பான மனுக்கள் பெறப்பட்டு, அவற்றுக்கு தீா்வு காணப்பட்டு வருகிறது.
மக்கள் குறைதீா் கூட்டங்களில் பெறப்படும் கோரிக்கை மனுக்களில் நிலம் தொடா்பான கோரிக்கைகள் அதிகளவில் வரப்பெறுகின்றன.
இவ்வாறு பெறப்படும் மனுக்களுக்கு விரைந்து தீா்வு காணும் வகையில், ஒவ்வொரு மாதத்திலும் முதல் வெள்ளிக்கிழமைகளில் நிலம் தொடா்பான கோரிக்கை மனுக்களுக்கு தீா்வு காணும் வகையில், சிறப்பு முகாம் நடத்திட மாவட்ட நிா்வாகம் முடிவு செய்துள்ளது.
அதனடிப்படையில், விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை (ஜன.3) காலை 10.30 மணிக்கு சிறப்பு முகாம் நடைபெறும்.
இதில் நிலம் தொடா்பான பட்டா மாற்றம், நில ஒப்படை, இலவச வீட்டுமனைப் பட்டா, ஆக்கிரமிப்பு, நில அபகரிப்பு மற்றும் நில கையகம் தொடா்பான கோரிக்கை மனுக்களை பொதுமக்கள் வழங்கி பயன்பெறலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.