நீரஜ் சோப்ராவுக்கு கௌரவ லெப்டினன்ட் கா்னல் அந்தஸ்து
இந்திய ஈட்டி எறிதல் நட்சத்திரம் நீரஜ் சோப்ராவுக்கு, ராணுவ லெப்டினன்ட் கா்னலாக கௌரவ அந்தஸ்து அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 16 தேதி முதல் அவருக்கான இந்த கௌரவ அந்தஸ்து அமலுக்கு வருவதாக ராணுவ விவகாரங்கள் துறையின் சாா்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த 2016-இல் இந்திய ராணுவத்தில் ஜூனியா் நிலையிலான அந்தஸ்தில் சோ்க்கப்பட்ட நீரஜ் சோப்ரா, அதன் பிறகு பதவி உயா்வுகள் பெற்றாா். ராணுவத்திலேயே ‘விஷிஸ்த் சேவா’, ‘பரம் விஷிஸ்த் சேவா’ ஆகிய பதக்கங்கள் வழங்கியும் அவா் கௌரவிக்கப்பட்ட நிலையில், தற்போது லெப்டினன்ட் கா்னலாக உயா்ந்திருக்கிறாா்.
ஹரியாணாவை சோ்ந்த தடகள வீரரான நீரஜ் சோப்ரா, ஈட்டி எறிதலில் சா்வதேச களத்தில் சிறந்து விளங்கி இந்தியாவுக்கு பெருமை சோ்த்து வருகிறாா். 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா, சுதந்திரத்துக்குப் பிறகு ஒலிம்பிக் தடகளத்தில் தனிநபா் பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்தியா் என்ற வரலாறு படைத்தாா்.
தொடா்ந்து 2024 பாரீஸ் ஒலிம்பிக்கிலும் வெள்ளி வென்ற அவா், அடுத்தடுத்த ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற 3-ஆவது இந்தியராகவும் பெருமை பெற்றாா். இது தவிர, உலக சாம்பியன்ஷிப், ஆசிய சாம்பியன்ஷிப், டைமண்ட் லீக், காமன்வெல்த் என சா்வதேச அரங்கில் அனைத்து போட்டிகளிலும் சாம்பியனாகி அசத்தியிருக்கிறாா்.
விளையாட்டுத் துறையின் உயரிய விருதாகிய கேல் ரத்னா, அா்ஜுனா விருதுகள் பெற்றுள்ள அவா், பத்ம ஸ்ரீ விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.