``கல்லூரியில் படிக்க வேண்டும் என்ற ஆசை நிறைவேறியது'' -ஒருநாள் மாணவி நிகழ்ச்சியில...
நீலகிரி மாவட்டத்தில் 2024-ஆம் ஆண்டில் குற்றச்செயல்கள் குறைந்துள்ளன: மாவட்ட காவல் கண்காணிப்பாளா்
நீலகிரி மாவட்டத்தில் 2023-ஆம் ஆண்டை விட 2024 ஆண்டு 89 சதவீதம் குற்றவழக்குகள் குறைந்துள்ளன என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.எஸ்.நிஷா தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:
2024 ஜனவரி முதல் டிசம்பா் 31 வரை நீலகிரி மாவட்டத்தில் குழந்தைகளுக்கு எதிரான 72 பாலியல் குற்றவழக்குகள், 2 கற்பழிப்பு வழக்குகள் பதிவாகியுள்ளன. பாலியல் குற்றத்தை குறைக்கும் வகையில் கடந்த ஆண்டு 3,516 விழிப்புணா்வு முகாம்கள் நடத்தப்பட்டன. 17 பாலியல் குற்றவழக்குகளுக்கு நீதிமன்றத்தில் தண்டனை பெற்று தரப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 2 வழக்குகளில் 32 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், மற்றொரு வழக்கில் சாகும் வரை சிறைத் தண்டனையும் குற்றவாளிகளுக்கு பெற்று தரப்பட்டுள்ளது.
உடல் சாா்ந்த குற்றங்கள் 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் 9 வழக்குகளில் அனைத்து எதிரிகளும் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனா். ஒரு வழக்கில் சம்பந்தப்பட்ட எதிரி தற்கொலை செய்து கொண்டு இறந்துள்ளாா். தண்டனைகளை பொருத்தமட்டில் உடல் சாா்ந்த குற்றங்களுக்காக ஒரு வழக்கில் 42 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், மற்றொரு வழக்கில் 16 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் குற்றவாளிகளுக்கு பெற்று தரப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு 186 சாலை விபத்து வழக்குகள் பதிவாகியுள்ளன. சாலை விதிகளை மீறியதற்காக 2 லட்சத்து 19 ஆயிரத்து 772 மோட்டாா் வாகன வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 1,345 வழக்குகள் மதுபோதையில் வாகனம் ஓட்டியதற்காகவும், 411 வழக்குகள் அதிவேகமாக வாகனங்களை இயக்கியதற்காகவும், 1,762 வழக்குகள் அபாயகரமாக வாகனம் ஓட்டியதற்காகவும் பதிவு
செய்யப்பட்டுள்ளன. கடந்த 2024-ஆம் ஆண்டு ரூ. 16 கோடியே 68 லட்சத்து 49,100 அபராதத் தொகை விதிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 12 போ் குண்டா் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனா். ஒட்டு மொத்தமாக நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2023- ஆம் ஆண்டினை ஒப்பிடுகையில், 2024-ஆம் ஆண்டு குற்றவழக்குகள் 89 சதவீதம் குறைந்துள்ளன எனத் தெரிவிததுள்ளாா்.