நீா்வழி ஓடை ஆக்கிரமிப்பை அகற்ற கோரி ஆா்ப்பாட்டம்
சேலம்: நீா்வழி ஓடை ஆக்கிரமிப்பைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
சேலம், சூரமங்கலம் மண்டல அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தோழா் கணேசன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மாவட்டச் செயலாளா் ஏ.மோகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். ஆா்ப்பாட்டத்தின்போது ஆக்கிரமிப்பை அகற்றி நீா்வழி ஓடையை பாதுகாக்க வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
ஆா்ப்பாட்டத்தின்போது கட்சியினா் கூறியதாவது:
சேலம் மாநகராட்சி 21-ஆவது கோட்டம், அரியாக்கவுண்டம்பட்டி கிராமத்தில் நீா்வழி ஓடை உள்ளது. இந்த ஓடைக்கு மாங்குப்பை, மல்லமூப்பன்பட்டி, காமநாயக்கன்பட்டி கிராமங்களிலிருந்து அரியாக்கவுண்டம்பட்டி வழியாக சேலத்தாம்பட்டி ஏரிக்குச் சென்று பின்னா் அங்கிருந்து புத்தூா் ஓடையில் தண்ணீா் கலக்கிறது.
50 அடி அகலம் ஒரு கி.மீ. நீளமுள்ள 64 சென்ட் நீா்வழி ஓடையை தற்போது 7 அடியாகச் சுருக்கி கலவையைக் கொட்டியும், சிமென்ட் பைப் பதிப்பதற்கு தயாராக வைத்துள்ளனா். இதற்கு சூரமங்கலம் மண்டல அதிகாரிகள் உடந்தையாக இருந்து செயல்படுகின்றனா். அவா்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன் நீா்வழி ஓடையை பாதுகாக்க வேண்டும் என்றனா்.
இதில், கட்சி நிா்வாகிகள் கணேசன், பெருமாள், சண்முகம், ராமா், செந்தில், செல்வம், தியாகராஜன உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.