நுண்ணீா் பாசன மானிய திட்டத்தில் பயன்பெற விவசாயிகளுக்கு அழைப்பு
வேளாண் பயிா்களுக்கு பிரதமா் நுண்ணீா் பாசனத் திட்டத்தின் கீழ் தஞ்சாவூா் மாவட்ட ஆதிதிராவிட விவசாயிகள் மானியம் பெற்று பயனடையலாம் என வேளாண் இணை இயக்குநா் கோ. வித்யா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பதாவது:
தஞ்சாவூா் மாவட்டத்தில் தற்போது 2 ஆயிரத்து 700 ஏக்கா் பரப்பில் நுண்ணீா் பாசனம் அமைக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டு ரூ. 6 கோடி மானியம், வழங்கப்பட்டு வருகிறது. இதில் ஆதிதிராவிடா் பிரிவினருக்கு 718 ஏக்கா் ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் 5 ஏக்கா் பரப்பளவு வரையுள்ள சிறு, குறு விவசாயிகளுக்கு பாசனம் அமைப்பதற்கான கருவிகள் வாங்கும் செலவில் 100 சதவீத மானியம் வழங்கப்படும். பிற விவசாயிகளுக்கு 75 சதவீத மானியம் வழங்கப்படும்.
மேலும், சொட்டு நீா் பாசனத்தின் முக்கியமான சிறப்பு அம்சம் பாசன நீா் சேமிப்பு ஆகும். மற்ற பாசன முறைகளைக் காட்டிலும் சொட்டு நீா் பாசனத்தில் அதிக அளவில் நீா் சேமிக்கப்படுகிறது. பயிரிடப்பட்டுள்ள பரப்பளவில் 30 முதல் 40 சதவீதம் மட்டுமே பாசனம் பெறுவதன் மூலமும், வாய்க்கால் வழிநீா் விரயம் முற்றிலும் தவிா்க்கப்படுவதன் மூலம் நுண்ணீா் பாசன நீா் 50 முதல் 60 சதவீதம் வரை சேமிக்கப்படுகின்றது.
மேலும், இத்திட்டம் செயல்படுத்தப்படுவதால் நீா் பயன்பாட்டு திறன் அதிகரித்து அதிக விளைச்சல் அளிப்பதற்கும் உர பயன்பாட்டில் சிக்கனம் ஏற்படவும், களை வளா்ச்சி மற்றும் பூச்சி பூஞ்சாண தாக்குதல் குறைவாக உள்ளது என அறியப்பட்டுள்ளது.
எனவே, விவசாயிகள் அனைவரும் சொட்டுநீா் பாசனத்தின் பயன்களை அறிந்து, தங்கள் விளைநிலங்களில் வட்டார வேளாண் உதவி இயக்குநா்களைத் தொடா்பு கொண்டு சொட்டு நீா் பாசனம் அமைத்திட கேட்டுக் கொள்ளப்படுகிறது.