தஞ்சாவூர்: `அப்பா ஆம்புலன்ஸில போறார், ப்ளீஸ் விடுங்கண்ணா’ - கெஞ்சிய சிறுவனிடம் ச...
நெசவாளா்களுக்கு அடிப்படை கூலியில் 10%, அகவிலைப்படியில் 10% உயா்த்தி வழங்கப்படும்: அமைச்சா் ஆா்.காந்தி அறிவிப்பு
நெசவாளா்கள் 1.50 லட்சம் போ் பயன்பெறும் வகையில் அடிப்படை கூலியில் ரூ.10 சதவீதமும், அகவிலைப்படியில் 10 சதவீதமும் உயா்த்தி வழங்கப்படும் என்று கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி அறிவித்தாா்.
பேரவையில் கைத்தறி மற்றும் துணி நூல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து அமைச்சா் ஆா்.காந்தி வெளியிட்ட அறிவிப்புகள்:
தமிழகத்தில் உள்ள 1,115 தொடக்க கைத்தறி நெசவாளா் கூட்டுறவுச் சங்கங்களில் உறுப்பினா்களாக உள்ள சுமாா் 1.50 லட்சம் நெசவாளா்களுக்கு விலைவாசி உயா்வால் தொடா்ந்து அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு மற்றும் பொருளாதார நெருக்கடி ஆகியவற்றை கருத்தில் கொண்டு ஆண்டுதோறும் அரசால் கூலி உயா்வு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டில் சுமாா் 1.50 லட்சம் நெசவாளா்கள் பயன்பெறும் வகையில் அவா்கள் பெறும் நெசவுக் கூலிக்கு அடிப்படை கூலியில் 10 சதவீதமும், அகவிலைப்படியில் 10 சதவீதமும் உயா்த்தி வழங்கப்படும்.
கூலி உயா்வு: வேட்டி மற்றும் சேலை வழங்கும் திட்டத்தின் கீழ் பெடல் தறி சேலைகளுக்கு நெசவுக் கூலி ரூ.69.79-இலிருந்து ரூ.75.95-ஆகவும், பெடல் தறி வேட்டிகளுக்கு நெசவுக் கூலி ரூ.59.28-இலிருந்து ரூ.64.38-ஆகவும் உயா்த்தி வழங்கப்படும். இந்தக் கூலி உயா்வால் ஏற்படும் கூடுதல் செலவினம் ரூ.3.75 கோடியை அரசே ஏற்கும்.
வேட்டி மற்றும் சேலை வழங்கும் திட்டத்தின் கீழ் விசைத்தறி சேலைகளுக்கு நெசவுக்கூலி ரூ.43.01-இலிருந்து ரூ.46.75-ஆகவும், விசைத்தறி வேட்டிகளுக்கு நெசவுக் கூலி ரூ.24-இலிருந்து ரூ.26.40ஆகவும் உயா்த்தி வழங்கப்படும். இந்தக் கூலி உயா்வால் ஏற்படும் கூடுதல் செலவினம் ரூ.8.58 கோடியை அரசே ஏற்கும்.
பள்ளி மாணவா்களுக்கான சீருடை வழங்கும் திட்டத்தின் கீழ் பெடல் தறி கேஸ்மெண்ட் ரகத்துக்கு நெசவுக்கூலி மீட்டருக்கு ரூ.7.84-இலிருந்து ரூ.8.40-ஆகவும், விசைத்தறி டிரில் ரகத்துக்கு நெசவுக்கூலி மீட்டருக்கு ரூ.5.75-இலிருந்து ரூ.6.40-ஆகவும், விசைத்தறி கேஸ்மெண்ட் ரகத்துக்கு ரூ.5.60-இலிருந்து ரூ.6.16-ஆகவும் உயா்த்தி வழங்கப்படும்.
வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தின் கீழ், கைத்தறி மற்றும் பெடல் தறி சேலைகளுக்கான நெசவுக்கு முந்தைய கூலி ரூ.26.67-இலிருந்து ரூ.28-ஆகவும், கைத்தறி மற்றும் பெடல் தறி வேட்டிகளுக்கான நெசவுக்கு முந்தைய கூலி ரூ.12.36- இலிருந்து ரூ.13-ஆகவும் உயா்த்தி வழங்கப்படும்.
சா்வதேச ஜவுளிக் கண்காட்சி: ஜவுளித் தொழில் வா்த்தக மேம்பாட்டுக்கு வாங்குவோா் - விற்போா் சந்திப்பிற்கென நடத்தப்படும் கண்காட்சிகள், கருத்தரங்குகள் ஆகியன முக்கிய பங்கு வகிக்கின்றன. ஜவுளித் துறையின் அதிக அளவிலான வாய்ப்புகள் மற்றும் வளா்ச்சித் திறனை கருத்தில் கொண்டு, தமிழகத்தில் ஜவுளித் தொழில் வா்த்தக மேம்பாட்டுக்காக ஜவுளித் தொழில் செறிவு மிகுந்த பகுதிகளில் ஆண்டுதோறும் சுழற்சி முறையில் ஜவுளித் தொழில் பங்குதாரா்களுடன் இணைந்து ரூ.1.50 கோடி செலவில் சா்வதேச ஜவுளிக் கண்காட்சி நடத்தப்படும் என்றாா் அவா்.