BB Tamil 9: "காசு அள்ளி தந்தாலும் அதை எல்லாம் ஆதரித்துப் பாட மாட்டார்" - கானா வி...
`நெஞ்சுவலி சார்' - போலீஸிடமிருந்து தப்பிச்சென்ற விசாரணை கைதி
தேனி அருகே பொம்மையகவுண்டன்பட்டி சீப்பர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் சுபாஷ் சங்கர் (25). இவர் திருமணம் முடிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். சுபாஷ் சங்கருக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. இதனால் அவரின் அம்மா மீனாதேவியிடம் அடிக்கடி மது குடிக்க பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளார். அவரின் அம்மா பணம் தர மறுத்ததால், அவரை அடித்ததோடு அவதூறாகப் பேசியுள்ளார். மேலும் அரிவாளை எடுத்து கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட மீனா தேவி அல்லிநகரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பின்னர் போலீசார் இது தொடர்பாக சுபாஷ்சங்கர் மீது கடந்த சனிக்கிழமையன்று வழக்குப் பதிவு செய்து, அவரைக் கைது செய்து செய்து நீதிமன்ற காவலில் வைத்திருந்தனர். இந்நிலையில் சுபாஷ் சங்கர் தனக்கு நெஞ்சு வலிப்பதாகக் கூறியுள்ளார்.

உடனே போலீசார் அவரை சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவருக்கு இசிஜி உள்ளிட்ட அனைத்து பரிசோதனைகளையும் செய்யப்பட்டது. மருத்துவமனையில் உள்ள கழிவறைக்குச் சென்று வருவதாக சென்ற சுபாஷ் சங்கர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டதாகக் கூறப்படுகிறது.இதனையடுத்து அல்லிநகரம் காவல் ஆய்வாளர் இளவரசு மற்றும் எஸ்ஐ கண்ணன் தலைமையில் இரண்டு தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிரமாக தப்பி ஓடிய சுபாஷ் சங்கரைத் தேடி வருகின்றனர்.