குடியரசு நாள்: ஜன. 24, 26 தேதிகளில் சிறப்பு ரயில்கள் - தெற்கு ரயில்வே
நெல்பயிா் விளைச்சல் போட்டிக்கு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்
‘நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தி திறனுக்கான’ விருது பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் அ.பாண்டியன் கூறியதாவது:
வேளாண்மை, உழவா் நலத் துறை மூலம், அதிக மகசூல் பெறும் நெல் விவசாயிகளுக்கு ‘நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தி திறனுக்கான’ விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த வகையில் 2024-25-ஆம் ஆண்டுக்கான சிறந்த விவசாயியை தோ்வு செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்தப் போட்டியில் கலந்து கொண்டு மாநில அளவில் முதலிடம் பெறும் விவசாயிக்கு ரூ.5 லட்சம், சிறப்பு பரிசு, ரூ.7ஆயிரம் மதிப்புள்ள தங்கப் பதக்கம் வழங்கப்பட்டு வருகிறது.
போட்டியில் பங்கேற்க விரும்பும் விவசாயி, குறைந்தபட்சம் 2 ஏக்கா் சொந்த நிலத்திலோ, குத்தைகை நிலத்திலோ திருந்திய முறையில் நெல் சாகுபடி செய்து இருக்க வேண்டும். பயிா் விளைச்சல் போட்டியில் குறைந்த பட்சம் 50 சென்ட் நிலத்தில், நடுவா்கள் முன்னிலையில் அறுவடை செய்யப்பட வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட சன்ன ரக நெல் பயிா் மட்டுமே பயிா் செய்து இருக்க வேண்டும். போட்டியில் பங்கேற்க விரும்பும் விவசாயிகள் உரிய ஆவணங்களுடன் தங்களது வட்டார வேளாண்மை உதவி இயக்குநரை அணுகி நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் பதிவுக் கட்டணமாக ரூ.150 செலுத்தி பதிவு செய்ய வேண்டும் என்றாா் அவா்.