Vijay CM ஆவாரா - விஜய்யின் ஜாதகம் எப்படி இருக்கு? - ஜோதிடர் shelvi interview | V...
நெல்லை ஆணவக் கொலை: முதல்வரைச் சந்தித்த கவினின் தந்தை!
நெல்லையில் ஆணவக் கொலை செய்யப்பட்ட கவின் செல்வகணேஷின் தந்தை இன்று(ஆக. 25) முதல்வரைச் சந்தித்துப் பேசியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகேயுள்ள ஆறுமுகமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த மென்பொறியாளா் கவின் செல்வகணேஷ் கடந்த ஜூலை 27-ஆம் தேதி நெல்லையில் ஆணவக் கொலை செய்யப்பட்டாா்.
வேறு சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை காதலித்து வந்ததால், காதலியின் சகோதரர் சுர்ஜித், கவினை வெட்டிப் படுகொலை செய்துள்ளார். பின்னர், பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். அவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் குண்டர் சட்டத்தில் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
காவல் உதவி ஆய்வாளர்களான சுர்ஜித்தின் பெற்றோர் இந்த வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் சுர்ஜித்தின் தந்தை சரவணன், சுர்ஜித்தின் சகோதரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் படுகொலை செய்யப்பட்ட கவினின் தந்தை இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்துப் பேசியுள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் உடனிருந்தார்.
தன்னுடைய குடும்பத்தினருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் தன்னுடைய மகன் கவின் ஆணவக் கொலையில் கூலிப்படையினரின் தொடர்பு இருப்பதால் குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் தன்னுடைய இளைய மகனுக்கு அரசு வேலை வழங்கவும் கோரிக்கை முன்வைத்துள்ளார்.
இதுபற்றி தொல். திருமாவளவன் தனது எக்ஸ் பக்கத்தில்,
"ஆணவக் கொலை செய்யப்பட்ட தம்பி கவினின் தந்தை சந்திரசேகருடன் இன்று தமிழ்நாடு முதல்வரைச் சந்தித்த பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் "அண்மையில் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட கவினின் தந்தை சந்திரசேகர் இன்று முதல்வரை நேரில் சந்தித்து தன்னுடைய குடும்பத்தினருக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். கவின் ஆணவக் கொலையில் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய வேண்டும். அந்த கொலையில் கூலிப்படையினருக்கும் தொடர்பு இருப்பதாக தெரிகிறது. எனவே, யாரும் தப்பித்துவிடாமல் இருக்கக் கூடிய வகையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார். அத்துடன் அவருடைய இளைய மகனுக்கு அரசு வேலைவாய்ப்பு வேண்டும் என்றும் கோரிக்கையை விடுத்திருக்கிறார்.
முதல்வர் கனிவுடன் கோரிக்கைகளை செவி மடுத்தார். நிறைவேற்றுவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வார் என்று பெரிதும் நம்புகிறோம். குறிப்பாக அவருடைய மனைவி பள்ளி ஆசிரியராக பணியாற்றுகிறார். அவருக்கு உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் அவருக்கு அவரது சொந்த பகுதியிலேயே அந்த கிராமத்திலேயே வேலை செய்யக்கூடிய வாய்ப்பை ஏற்படுத்தி தர வேண்டும். வெளியே செல்வது பாதுகாப்பற்ற ஒரு சூழலாக இருக்கிறது என்கிற கவலையை வெளிப்படுத்தி இருக்கிறார். அவற்றையெல்லாம் பரிசீலிப்பதாக முதல்வர் கூறியிருக்கிறார்.
இப்போதைக்கு கவின் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் கோரிக்கையை மட்டுமே முதல்வரிடத்தில் நாங்கள் பேசி இருக்கிறோம். ஆணவக் கொலை தடுப்புச் சட்டம் வேண்டும் என்பதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தொடர்ந்து உறுதியாக இருக்கிறோம், வலியுறுத்தியும் வருகிறோம்.
நாங்கள் முதல்வரிடத்தில் 'மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு' என்பதை சுட்டிக்காட்டி இருக்கிறோம்.
விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் சில கோரிக்கை மனுக்கள் வழங்கி இருக்கிறோம்" என்று பதிவிட்டுள்ளார்.
ஆணவக் கொலை செய்யப்பட்ட தம்பி கவின் அவர்களின் தந்தை சந்திரசேகர் அவர்களோடு இன்று மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களை சந்தித்த பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில்
— Thol. Thirumavalavan (@thirumaofficial) August 25, 2025
"அண்மையில் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட கவின் அவர்களின் தந்தை சந்திரசேகர் அவர்கள் இன்று மாண்புமிகு முதல்வர் அவர்களை… pic.twitter.com/z7jdmHYMoW