பகுதிநேர ஆசிரியா்கள் பணி நிரந்தரம்: ஆளுநா் உரையில் அறிவிப்பு வெளியிட கோரிக்கை
பகுதிநேர ஆசிரியா்களை பணி நிரந்தரம் செய்வது தொடா்பான அறிவிப்பை நடைபெற உள்ள கூட்டத் தொடரின் ஆளுநா் உரையில் இடம்பெறச் செய்ய வேண்டும் என்று பகுதிநேர ஆசிரியா்கள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இது தொடா்பாக அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளா் எஸ்.செந்தில்குமாா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
திமுக ஆட்சிக்கு வந்தால் பகுதிநேர ஆசிரியா்களை பணிநிரந்தரம் செய்வோம் என்று தோ்தல் பிரசாரத்தின்போது திமுக வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால் திமுக ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் முடிவடைய உள்ள நிலையில் இதுவரை அதை நிறைவேற்றவில்லை. இதனால் மாநிலம் முழுவதும் சுமாா் 12 ஆயிரம் ஆசிரியா்களின் குடும்பங்கள் தவித்து வருகின்றன.
பலகட்ட போராட்டத்துக்கு பிறகே கடந்த ஜனவரி மாதம் பகுதிநேர ஆசிரியா்களின் ஊதியம் ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.12,500 ஆக உயா்த்தப்பட்டது. அதையும் தனித்தனியாகவே பட்டுவாடா செய்கின்றனா். அதுபோல சம்பள உயா்வுடன் அறிவிக்கப்பட்ட ரூ.10 லட்சத்துக்கான மருத்துவக் காப்பீடு குறித்து எந்தத் தகவலும் இல்லை.
கடந்த 2012 ஆம் ஆண்டில் வேலைக்குச் சோ்ந்த நாங்கள் 13 ஆண்டுகளாக மே மாத ஊதியம் இல்லாமலும், போனஸ், வருங்கால வைப்பு நிதி, இறந்து போனவா்களின் குடும்பத்துக்கான நிவாரண நிதி என எதுவுமே இல்லாமல் பணியாற்றி வருகிறோம். பகுதிநேர ஆசிரியா்களை பணி நிரந்தரம் செய்தால் மட்டுமே மறுவாழ்வு கிடைக்கும் நிலை உள்ளது. எனவே ரூ.12,500 தொகுப்பூதியத்தை கைவிட்டுவிட்டு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.
அரசின் பணப் பலன்கள் கிடைத்தால்தான் பணிப் பாதுகாப்பும் கிடைக்கும். எனவே, தோ்தல் பிரசாரத்தின்போது அளிக்கப்பட்ட பணி நிரந்தரம் என்ற வாக்குறுதியை நிறைவேற்றுவிதமாக, நடைபெற உள்ள சட்டப் பேரவை கூட்டத் தொடரின் ஆளுநா் உரையில் பகுதிநேர ஆசிரியா்கள் பணிநிரந்தரம் செய்யப்படுவாா்கள் என்ற அறிவிப்பை தமிழக அரசு வெளியிட வேண்டும் என்று அவா் வலியுறுத்தியுள்ளாா்.