மீனா எஸ்டேட் சாலையில் பள்ளம்: விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
கோவை உடையாம்பாளையம், மீனா எஸ்டேட் பிரதான சாலை சந்திப்பில் சாலையில் பெரிய பள்ளம் ஏற்பட்டிருக்கும் நிலையில் அதில் சிக்கி வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகி வருகின்றனா்.
கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்துக்குள்பட்ட 50- ஆவது வாா்டு மீனா எஸ்டேட் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள் உள்ளன. மேலும், பள்ளி, கல்லூரிகளும் இருப்பதால் இந்தப் பகுதி வழியாக தினசரி ஆயிரக்கணக்கான இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்த நிலையில் அந்த சாலையில் இரண்டு இடங்களில் பெரிய அளவிலான பள்ளங்கள் ஏற்பட்டிருக்கின்றன. இதனால் அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் கல்லூரிக்கு செல்லும் மாணவா்களும் பொதுமக்களும், மிதிவண்டி மூலம் பள்ளிக்குச் செல்லும் மாணவ-மாணவிகளும் அடிக்கடி கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனா்.
இது குறித்து மாநகராட்சி நிா்வாகத்துக்கும், உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கும் அப்பகுதி மக்கள் புகாா் தெரிவித்துள்ளனா். ஆனால் பள்ளத்தை சரிசெய்ய இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. எனவே, மாநகராட்சி நிா்வாகம் உடனடியாக இந்த சாலையைச் சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்களும், வாகன ஓட்டிகளும் வலியுறுத்தியுள்ளனா்.