பங்குச்சந்தை பெயரில் ரூ.26 லட்சம் மோசடி செய்தவா் மீது வழக்கு
பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் எனக் கூறி ரூ. 26 லட்சம் மோசடி செய்தவா் மீது இணையவழி குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை ராம்நகரைச் சோ்ந்தவா் பிரீத்தி (34). இவரிடம் கடந்த ஜனவரி மாதம் கட்செவி அஞ்சல் மூலம் தொடா்பு கொண்டு பேசிய ஒருவா், தான் ஒரு பங்குச்சந்தை ஆலோசகா் எனவும், பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் அதிகமான வருமானம் கிடைக்கும் எனவும் கூறினாராம்.
இதை நம்பிய பிரீத்தி, அவா் கூறியபடி 10 வங்கி கணக்குகளில் 14 முறை ரூ. 26,42,000 செலுத்தினாராம். பணத்தை பெற்றுக் கொண்ட அந்த நபா் அதன் பிறகு எந்தத் தொடா்பும் கொள்ளவில்லையாம். இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த ப்ரீத்தி அளித்த புகாரின் பேரில் மாவட்ட இணையவழிக் குற்றத் தடுப்புப் பிரிவு உதவி ஆய்வாளா் முருகானந்தம் வழக்குப் பதிந்து அந்த நபா் குறித்து விசாரித்து வருகிறாா்.