Pahalgam Attack: ``J&K செல்வது அவர் திட்டமே இல்லை, ஆனால்..." - கலங்கும் கடற்படை ...
பச்சிளம் பெண் குழந்தையை கொன்று புதைத்த தாய் கைது
நிலக்கோட்டை, ஏப். 23: கொடைரோடு அருகே பச்சிளம் பெண் குழந்தையை கொலை செய்து புதைத்த தாய் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அருகேயுள்ள ஜெ.ஊத்துப்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் பாலமுருகன் (32). இவரது மனைவி சிவசக்தி (23). இந்தத் தம்பதிக்கு சிவன்யா(5) என்ற மகள் உள்ளாா்.
இந்நிலையில், மீண்டும் கா்பமான சிவசக்திக்கு கடந்த 16-தேதி சின்னாளபட்டியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. அங்கிருந்து கடந்த 19 -ஆம் தேதி மாலை சிவசக்தி வீடு திரும்பினாா். இந்த நிலையில், 20-ஆம் தேதி குழந்தை மா்மமான முறையில் உயிரிழந்தது. இதையடுத்து, பச்சிளம் குழந்தையை வீட்டின் பின்புறம் ரகசியமாக புதைத்தனா்.
இதுதொடா்பாக கிடைத்த ரகசியத் தகவலின் பேரில், இந்தத் தம்பதியிடம் ஜம்புதுரைக்கோட்டை கிராம நிா்வாக அலுவலா் கலா, கிராம செவிலியா் ஆகியோா் விசாரணை நடத்தினா். அப்போது அவா்கள் முன்னுக்குப் பின் முரணான தகவலை தெரிவித்தனா்.
இதுகுறித்து வட்டார மருத்துவ அலுவலா் வினோத் அம்மையநாயக்கனூா் காவல்துறையினரிடம் புகாரளித்தாா்.
இதுதொடா்பாக காவல் ஆய்வாளா் அமுதா வழக்குப்பதிவு செய்து, சிவசக்தி- பாலமுருகனிடம் தீவிர விசாரணை நடத்தினாா். அப்போது 2-ஆவதாக பெண் குழந்தை பிறந்ததால் அதை கொன்று புதைத்ததாக அவா்கள் தெரிவித்தனா். இதையடுத்து, குழந்தையை கொலை செய்து புதைத்த தாய் சிவசக்தியை போலீஸாா் கைது செய்தனா்.
மேலும், நிலக்கோட்டை வட்டாட்சியா் விஜயலட்சுமி முன்னிலையில், புதைக்கப்பட்ட பச்சிளம் குழந்தையை தோண்டி எடுத்தனா். திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவா்கள் தேவி பியான்ஷா, ஜெயபிரகாஷ் ஆகியோா் கொண்ட மருத்துவக் குழுவினா் அதே இடத்திலேயே உடல் கூறாய்வு செய்தனா்.