Ravi Mohan: "என்னை மென்மையான அன்பாலும் கருணையாலும் ஆசீர்வதித்த மூன்று பெண்கள்!" ...
பஞ்சாபில் வெள்ளத்தில் சிக்கிய பள்ளிக்கூடம்! 400 மாணவர்களை மீட்க களத்தில் ராணுவம்!
பஞ்சாப் மாநிலத்தில், வெள்ளத்தில் சிக்கிய பள்ளிக்கூடத்தில் இருந்து 400 மாணவர்கள் மற்றும் 40 ஆசிரியர்களை மீட்கும் பணிகளில் இந்திய ராணுவம் உள்ளிட்ட படைகள் ஈடுபட்டு வருகின்றன.
குர்தாஸ்பூர் மாவட்டத்தின், தபூரி எனும் கிராமத்தில் அமைந்துள்ள ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிக்கூடத்தினுள், 4 முதல் 5 அடிக்கு வெள்ள நீர் புகுந்துள்ளது. இதனால், அப்பள்ளிக்கூடம் மற்றும் அங்குள்ள விடுதியின் தரைதளம் முழுவதும் வெள்ளம் சூழ்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், விடுதியில் தங்கிப்படிக்கும் 6 ஆம் வகுப்பு முதல் 10 வகுப்பு வரையிலான சுமார் 400 மாணவர்கள் மற்றும் பள்ளி முதல்வர் உள்பட 40 ஆசிரியர்களும், அங்கிருந்து வெளியேற முடியாமல் தவிப்பதாகத் தகவல் வெளியானது.
இதனைத் தொடர்ந்து, தேசிய பேரிடர் மீட்புப் படை, இந்திய ராணுவப் படை மற்றும் உள்ளூர்வாசிகளும் இணைந்து படகுகள் மூலம் பள்ளிக்கூடத்தில் சிக்கியுள்ள மாணவர்களையும் ஆசிரியர்களையும் மீட்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஹிமாசலப் பிரதேசம் போன்ற மாநிலங்களில், தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், பஞ்சாபின் பாக்ரா, போங், ரஞ்சித் சாகர் உள்ளிட்ட முக்கிய அணைகளின் நீர்மட்டமானது அதிகரித்து வருகின்றது. மேலும், சட்லுஜ், ரவி போன்ற நதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால், 100-க்கும் அதிகமான கிராமங்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
பஞ்சாபில் வெள்ளத்தால், அதிகம் பாதிக்கப்பட்டுள்ள பதான்கோட், குர்தாஸ்பூர், ஃபஸில்கா, அமிர்தசரஸ், ஹோஷியார்பூர் மற்றும் ஜலந்தர் ஆகிய மாவட்டங்களில் தேசிய பேரிடர் மீட்புப் படையின் குழுக்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.
இதையும் படிக்க: மோடியின் தவறான வெளியுறவுக் கொள்கையால் வேலையிழப்பு அதிகரிக்கும்: கார்கே