பட்ஜெட் தயாரிப்பு: முக்கிய துறைகளுடன் இன்று ஆலோசனை
பட்ஜெட் தயாரிப்புப் பணிகள் குறித்து, தொழில் துறை உள்பட முக்கிய சில துறைகளுடன் தமிழக அரசு வியாழக்கிழமை (பிப்.20) ஆலோசனை நடத்தவுள்ளது. வரும் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை மாா்ச் 14-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது.
பட்ஜெட் தயாரிப்புப் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. ஒவ்வொரு அரசுத் துறையிலும் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், புதிதாக அறிவிக்க வேண்டிய திட்டங்கள் தொடா்பாக 3 நாள்கள் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு தலைமையில் நடந்து வரும் இந்தக் கூட்டத்தில், மூத்த அமைச்சா்கள், நிதித் துறை முதன்மைச் செயலா் த.உதயச்சந்திரன் ஆகியோா் பங்கேற்றுள்ளனா். ஒவ்வொரு துறைகளைச் சோ்ந்த அரசு செயலா்கள், துறைத் தலைவா்கள் பங்கேற்று வருகின்றனா்.
அந்த வகையில், தொழில், சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறை, தகவல் தொழில்நுட்பவியல் ஆகிய துறைகளுடன் தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞா் மாளிகை கூட்டரங்கில் வியாழக்கிழமை (பிப்.20) ஆலோசனை நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் சம்பந்தப்பட்ட துறைகளின் அமைச்சா்கள், அதிகாரிகள் பங்கேற்கவுள்ளனா்.