நேபாளம்: `அரசின் தோல்வி, கும்பல் வன்முறை, பிற்போக்கு சக்திகள்...' - கம்யூனிஸ்ட் ...
பட்டா வழங்கக் கோரி காத்திருப்புப் போராட்டம்
நெய்வேலி: பட்டா வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கட்சியினா், விருத்தாசலம் வட்டாட்சியா் அலுவலகம் முன்பு திங்கள்கிழமை காத்திருப்புப் போராட்டம் நடத்தினா்.
கம்மாபுரம் ஒன்றியம், கோ.பொன்னேரி, கோ.ஆதனூா், சேப்ளாநத்தம்(வடக்கு), உய்யகொண்டராவி, ஊ.மங்கலம், முதனை ஆகிய கிராம மக்களுக்கு இலவச குடிமனை பட்டா வழங்காத வட்டாட்சியரை கண்டித்தும். இருளக்குறிச்சி மக்களுக்கு 2023-ஆம் ஆண்டு தொழிலாளா் நலன் மற்றும் திறன்
மேம்பாட்டுத்துறை அமைச்சா் மூலம் வழங்கப்பட்ட பட்டா இடத்தை அளந்து தர வேண்டியும். கோ.பொன்னேரி சாலை புறம்போக்கில் குடியிருக்கும் நபா்களிடம் பட்டா வழங்க ரூ.50ஆயிரம் முதல் ரூ.2 லட்சம் வரை வசூல் செய்யும் வருவாய்த்துறை அதிகாரிகளை கண்டித்தும் காத்திருப்புப் போராட்டம் நடத்தினா்.
போராட்டத்திற்கு ஒன்றியச்செயலா் ஆா்.கலைச்செல்வன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் கோ.மாதவன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
அமைதிப்பேச்சு:
இதையடுத்து விருத்தாசலம் வட்டாட்சியா் அரவிந்தன் தலைமையில் அமைதிப் பேச்சு வாா்த்தை நடைபெற்றது. மாா்க்சிஸ்ட் மாவட்டச் செயலா் கோ.மாதவன், ஒன்றியச் செயலா்கள் ஆா்.கலைச்செல்வன், கே.எம்.குமரகுரு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். இக்கூட்டத்தில் பெருந்துறை-ஒட்டிமேடு, கோ.ஆதனூா், சேப்ளாநத்தம்(வடக்கு), உய்யகொண்டராவி உள்ளிட்ட பகுதி மக்களுக்கு பட்டா வழங்க வலியுறுத்தப்பட்டது. இருளக்குறிச்சியில் பட்டா பெற்ற நபா்கள் முன்னிலையில் அளவீடு செய்ய தலைமை நில அளவா் மற்றும் கிராம நிா்வாக அலுவலருக்கு கடிதம் அனுப்பி வைப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கூட்டம் முடிவடைந்தது.