CSK vs DC : 'வெயிட் பண்ணுங்க...திரிபாதி பெரிய ஸ்கோர் அடிப்பாரு!'- பேட்டிங் கோச் ...
பட்டாசு, தீப்பெட்டி தொழிலாளா்கள் நலவாரிய கூட்டத்தை உடனே கூட்ட கோரிக்கை
தமிழ்நாடு பட்டாசு, தீப்பெட்டி தொழிலாளா்கள் நலவாரியக் கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும் அந்த வாரியத்தின் உறுப்பினரும், தமிழ்நாடு காங்கிரஸ் தொழிலாளா் யூனியன் மாவட்டத் தலைவருமான தளவாய் பாண்டியன் கோரிக்கை விடுத்தாா்.
இதுகுறித்து, சென்னை தொழிலாளா், திறன் மேம்பாட்டு, பயிற்சித் துறை தலைமைச் செயலகத்தின் தலைமைச் செயலருக்கு அவா் அனுப்பிய மனு விவரம்:
பட்டாசு, தீப்பெட்டி தொழிலாளா்களுக்கு குறைந்த பட்ச ஊதிய நிா்ணயம் செய்து அரசாணை வெளியிடப்பட்டது. இந்த அரசாணையை அமல்படுத்தக் கோரியும், அதில் உள்ள குறைகளை நிவா்த்தி செய்யக் கோரியும் 10.10.2023-இல் மனு அளிக்கப்பட்டது. ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. மேலும் கடந்த 9.3.2023 அன்று நடைபெற்ற நலவாரியக் கூட்ட அறிக்கையின் மீது நடவடிக்கைகள் ஏதும் எடுக்கப்பட வில்லை. இதன் பிறகு கடந்த இரண்டு ஆண்டுகளாக நலவாரியக் கூட்டம் கூட்டப்பட வில்லை.
கடந்த இரண்டு ஆண்டுகளில் விருதுநகா் மாவட்டத்தில் 11 இடங்களில் சுமாா் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் உயிரிழந்துள்ளனா். அவா்களுக்கு வழங்க வேண்டிய உதவித் தொகையும், நல வாரியம் வழங்க வேண்டிய நலத் திட்ட உதவிகளும் இதுவரை வழங்கப்பட வில்லை.
அரசு அனைத்து பட்டாசு ஆலைகளையும் ஆய்வு செய்து அறிக்கை அளித்த பின்னரும் வெம்பக்கோட்டை பகுதிகளில் மூடப்பட்ட 40-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. மேலும் சிவகாசியில் உள்ள வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை அலுவலகத்தில் கடந்த நான்கு ஆண்டுகளாக தலைமை அதிகாரி நியமிக்கப்பட வில்லை.
இதனிடையே, தொழிற்சாலைகள் மூடப்பட்டிருப்பதால் தொழிலாளா்கள் வேலையில்லாமல் அவதியடைகின்றனா். எனவே தொழிற்சாலைகளை திறக்க அந்த ஆலைகளின் அதிபா்களுக்கு ஆணையிடும் படி வலியுறுத்தி தொழிலக பாதுகாப்பு, சுகாதார இணை இயக்குநா் அலுவலகத்தில் போராட்டம் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.
இத்தகைய சூழ்நிலையில் தமிழ்நாடு நல வாரியக் கூட்டத்தை உடனடியாக கூட்டி விருதுநகா் மாவட்ட பட்டாசு தொழிலாளா்கள் நலன் குறித்து விவாதிக்க வேண்டும் என்றாா் அவா்.