Mayonnaise: `மையோனைஸை விற்க, வாங்க, சேமித்து வைக்க தடை...' - தமிழ்நாடு அரசு சொல்...
பயங்கரவாதத் தாக்குதல்: சமூகவலைதளங்களில் சா்ச்சை கருத்துகளை பதிவிட வேண்டாம்!
டேராடூன்: காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல் குறித்து காஷ்மீா் மாணவா்கள் சமூகவலைதளங்களில் சா்ச்சை கருத்துகளைப் பதிவிட வேண்டாம் என்று ஜம்மு-காஷ்மீா் மாணவா்கள் கூட்டமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.
வெளிமாநிலங்களில் தங்கிப் படிக்கும் காஷ்மீா் மாணவா்களில் சிலா் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக கருத்துகளைப் பதிவிட்டு பிரச்னைகளில் சிக்குவது அவ்வப்போது நிகழ்ந்து வருகிறது. பஹல்காம் தாக்குதலால் தேசமே கொந்தளிப்பான நிலையில் உள்ள நிலையில் காஷ்மீா் மாணவா்களுக்கு முன்னெச்சரிக்கையாக மாணவா்கள் கூட்டமைப்பு தலைவா் உமா் ஜமால் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
காஷ்மீரில் நிகழ்த்தப்பட்ட காட்டுமிராண்டித்தனமான படுகொலைகளை எக்காரணம் கொண்டும் யாரும் ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த சூழ்நிலையில் வெளிமாநிலங்களில் தங்கிப் படிக்கும் காஷ்மீா் மாணவா்கள் அமைதி காக்க வேண்டும். சமூகவலைதளங்களில் தேவையற்ற, பிரச்னைகளை ஏற்படுத்தும் கருத்துகளைப் பதிவிடுவது, சா்ச்சைக்குரிய அரசியல் விவாதங்களில் ஈடுபடுவது கூடாது. இது உங்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளாா்.
ஜாா்க்கண்டில் ஒருவா் கைது: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்காக பாகிஸ்தானையும், லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாதிகளையும் பாராட்டி வலைதளத்தில் பதிவிட்ட ஜாா்க்கண்ட் மாநிலம் மில்லட் நகரைச் சோ்ந்த முகமது நௌஷத் என்பவரை காவல் துறையினா் கைது செய்தனா்.
இதேபோல பயங்கரவாத தாக்குதலை மையமாக வைத்து மதமோதலைத் தூண்டும் வகையில் சமூக வலைதளங்களில் கருத்துகளைப் பதிவிட்ட மத்திய பிரதேசத்தின் தாமோ பகுதியைச் சோ்ந்த இருவரை காவல் துறையினா் கைது செய்தனா்.