பயணிகள் நிழல் குடை இல்லாததால் பொதுமக்கள் அவதி
திருவாடானை அருகே பயணிகள் நிழல் குடை இல்லாததால் மாணவ, மாணவிகள், பொதுமக்கள் அவதிப்படுகின்றனா்.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள பாரதிநகரில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பயணிகள் நிழல்குடை இருந்தது. இதை இந்தப் பகுதி பொதுமக்கள், பள்ளி கல்லூரி மாணவிகள் பயன்படுத்தி வந்தனா்.
இந்தச் சாலை வழியாக திருச்சி-ராமேசுவரம், மதுரை -தொண்டி , ஓரியூா்-ஆா்.எஸ் .மங்கலம் ஆகிய பகுதிகளுக்கான பேருந்து போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இதனால், நாளொன்றுக்கு ஏராளமான வாகனங்கள் இந்த வழியாக வந்து செல்கின்றன.

இந்த நிலையில், பயணிகள் நிழல் குடை சேதமடைந்ததால், இதை நெடுஞ்சாலைத் துறையினா் அகற்றினா். ஆனால், அந்த இடத்தில் புதிய நிழல்குடை கட்டப்படாததால் மாணவ, மாணவிகள், பொதுமக்கள் அவதிப்படுகின்றனா்.
எனவே இங்கு பயணிகள் நிழல் குடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.